பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவாகப் பதிவிட்ட விவகாரத்தில், தனது தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கூறி பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கடந்த ஏப்ரல் 2018 இல் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஒரு பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநரின் இச்செயலுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, பெண் பத்திரிகையாளர்கள் பற்றி பாஜக செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் தனது சமூகவலைதளத்தில் இழிவான கருத்துகளை வெளியிட்டதால், எஸ்.வி.சேகருக்கு எதிராக கண்டங்கள் எழுந்தன. மேலும், பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் எஸ்.வி.சேகர் மீது புகார் கொடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக எஸ்.வி.சேகர் மீது காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பில் சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை நீக்கப்பட்டு, மன்னிப்பும் கேட்கபட்டதாகவும், நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையின்போது காவல்துறை தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக ஒருமுறை கூட எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று (8.4.2022) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரின் கருத்தை படித்து பார்க்காமல் துரதிஷ்டவசமாக பார்வேர்ட் செய்ததாகவும், தனது தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை என கூறி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கூறி மனு தாக்கல் செய்யபட்டது. விசாரணைக்கு தேவைப்படும்போதெல்லாம் ஆஜராவதாகவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவது குறித்த நடிகர் எஸ்.வி.சேகரின் நிலைப்பாட்டை, நான்கு புகார்கள் மீதான வழக்குகளிலும் தனித்தனி பிரமான பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.