மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மறைந்த ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைத்தது. இந்த காலக்கட்டத்தில், வீட்டு வசதி மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து கடந்த 2006 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியது. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தியது.

மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதற்கிடையே உயர் நீதிமன்ற வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் என்ற புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுவதால், செப்டம்பர் மாதம் வழக்கை தள்ளிவைப்பதாகவும், அதுவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு அனிதா ராதாகிருஷ்ணன் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.