கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட மத்திய அரசு முதல்கட்ட அனுமதி வழங்கியதை அடுத்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை கர்நாடக அரசு விரைவில் தொடங்க உள்ளது.
 
இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடந்தது.
 
சட்டப்பேரவையில் மேகதாது அணை திட்டத்துக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் மத்திய, மாநில அரசுக்களை விமர்சனம் செய்தார்.
 
மு.க. ஸ்டாலின் பேசுகையில், மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தின் மூலமாக தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
 
எங்களை பொறுத்தவரையில் அந்த தீர்மானத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டு, கட்சி பாகுபாடின்றி இது தமிழக மக்களுடைய வாழ்வாதார பிரச்னை என்ற காரணத்தால் நாங்கள் ஆதரித்து பேசியிருக்கிறோம்.
 
பிரச்சனையில் நியாயமாக ஆணையத்தை கண்டிக்கிற நேரத்தில் மத்திய அரசையும் கண்டித்து அந்தத் தீர்மானம் இடம் பெற்றிருக்க வேண்டும். வெறும் வேண்டுகோள் கேட்கக்கூடிய வகையில் தான் அந்தத் தீர்மானம் அமைந்திருக்கிறது.
 
ஒரு கண்டன தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தால் அது முழுஅளவில் நிறைவடைய கூடிய நிலையில் இருந்திருக்கும் என்ற கருத்தை எடுத்து சொன்னேன்.
 
ஆனால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும், தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய மக்களுடைய வாழ்வாதாரத்தை அடிப்படையாக வைத்து தீர்மானத்தை நாங்கள் ஆதரித்து நிறைவேற்றி தந்திருக்கிறோம் என்றார்.
 

கஜா புயல் பாதிப்பு மற்றும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டத்தை நாளையும் நீட்டிக்க கோரிக்கை வைத்தும், அதனை பேரவை தலைவரோ, இந்த அரசோ ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை திமுக வன்மையாக கண்டிக்கிறது என்றார்.

அனுமதி தந்த மத்திய அரசை கண்டிக்காத அதிமுக அரசின் முதல்வர் மேகதாது அணையை எதிர்த்து தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.