ஆன்மிகத்தோடு அரசியலிலும் ஈடுபாடு கொண்ட மதுரை ஆதீனம் 292வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் திடீர் உடல் நலக்குறைவால் மறைந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த ஆதீனம் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த மடத்தின் கீழ் தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் அக்னீஸ்வர சுவாமி கோயில், திருப்புறம்பியம் காசிநாத சுவாமி கோயில், கச்சனம் கைசின்னேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன.
மதுரை ஆதீன மடத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன. மேலும் மதுரை தெற்கு ஆவணி மூலவீதியில் ஆதீன மடத்திற்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
1980 ஆம் ஆண்டு மதுரை ஆதீனமான சோமசுந்தர தேசிகர் மரணம் அடைந்த பிறகு 292வது மதுரை ஆதீனமாக பதவியேற்றார். மதுரை ஆதீனமான அருணகிரிநாதர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தருமபுர ஆதீனத்தின் சீடராக இருந்து அங்கு பயிற்சி பெற்றார்.
பின்னர் 1975 ஆம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக பதவி ஏற்றார். சைவ சமய நெறியை மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும், அனைத்து மத மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்பதே தலையாய கொள்கையாக கடைபிடித்தார். இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய மேடைகளிலும் உரையாற்றியுள்ளார்.
சைவ சித்தாந்தங்களோடு விளையாட்டு, பத்திரிகை என பல்வேறு துறைகளில் ஆர்வமுடன் இருந்தார். ஆன்மிகத்தோடு அரசியலிலும் ஈடுபாடு கொண்ட மதுரை ஆதீனம் முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் நட்புடன் இருந்து வந்தார். மேலும் மூப்பனார், நாகூர் அனிபா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் நட்பு பாராட்டினார். அவ்வப்போது தேர்தல் பிரசாரமும் மேற்கொண்டவர்.
இந்நிலையில் ஆதீனம் குருமகா சன்னிதானமான அருணகிரிநாதருக்கு வயது முதிர்வு காரணமாக கடந்த 9 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, மதுரை கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மதுரை ஆதினம் அருணகிரிநாதருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மறைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மதுரை ஆதீனத்தின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் வெளியிட்டுள்ள இரங்கள் செய்தியில், “ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த மதுரை ஆதீனம் திரு.அருணகிரிநாதர் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து துயருற்றேன். அன்னாரது மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமனம் செய்ததால் சர்ச்சைகள் வெடித்தன. இந்நியமனத்தை காஞ்சி, திருவாவடுதுறை ஆதீன மடங்கள் உள்ளிட்ட அனைத்து சைவ மடங்களும் கடுமையாக எதிர்த்தன.
ஆனாலும், நித்யானந்தாவை நீக்க முடியாது என ஆதீனம் அருணகிரிநாதர் அறிவித்தார். இந்நியமனத்துக்கு பல்வேறு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து, பல போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் மதுரை ஆதீன மடத்தை அரசே ஏற்கப் போவதாகத் தகவல்கள் பரவின.
இதனையடுத்து 2012 ஆம் ஆண்டே நித்யானந்தாவை வாரிசுப் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிடுவதாக மதுரை ஆதீனம் அறிவித்தார். இதன்பின்னர் நித்யானந்தா நியமனம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஊழல் வழக்கு: எஸ்.பி.வேலுமணியின் வங்கி கணக்கு, பாஸ்போர்ட் முடக்கம்