காவலராக இருக்க வேண்டியவரே திருடராக இருக்கிறார் என பிரதமர் மோடியை நேரடியாக பாஜக வின் கட்சி கூட்டணி தலைவர் சிவசேனா வின் உத்தவ் தாக்கரே சாடியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக புகார் கூறியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் காவலராக இருக்க வேண்டியவரே திருடராக இருக்கிறார் என பிரதமர் மோடியை தொடர்ந்து சாடி வருகிறார்.
 
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் பந்தர்பூரில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சிறிய கதை ஒன்றை கூறினார்.
 
தாம் ஒருமுறை நான் பிரச்சாரத்திற்காக சென்ற போது, விவசாயி ஒருவர் கையில் பூச்சியால் தாக்குதலுக்குள்ளாகி இருந்த எலுமிச்சை மரத்தை தம்மிடம் காட்டி வேதனைபட்டதாக கூறினார்.
 
பூச்சிகளை அழிக்கவும், பூச்சிக்கொல்லி தயாரிக்கவும், பயன்படும் எலுமிச்சை மரமே நோய் தாக்குதலுக்குள்ளாகிவிட்டதாக விவசாயி வேதனையுடன் தம்மிடம் கூறினார்.
 
அவரிடம் நாட்டின் நிலைமையும் தற்போது அப்படிதான் உள்ளது. யார் நாட்டை பாதுகாக்க வேண்டிய இடத்தில் உள்ளார்களோ, அவர்களே தற்போது கொள்ளையர்களாக உள்ளனர் என்று நான் கூறினேன் என்ற போது தாக்கரேவின் விமர்சனத்தை கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
 
மேலும் பேசிய உத்தவ் தாக்கரே, தனியார் நிறுவனங்களின் நலனுக்காகவே மட்டுமேமத்திய அரசு பாடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
 
2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தற்போது கூறும் பிரதமர் மோடி, தேர்தலுக்குப் பிறகு அதையும் சும்மா பேச்சுக்காக கூறியது என சொன்னாலும் சொல்லி விடுவார் என உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.