இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஜூன், ஜூலை மாதங்களில் புதிய உச்சத்தை எட்டும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதாகவும், அரசு அறிவித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகவே நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 56409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1890 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 37729 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 16790 பேர் குணமாகி உள்ளனர். மத்திய மாநில அரசும் தொடர்ந்து தொற்றை தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கடந்த சில வாரங்களில் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஜூன் ஜூலை மாதத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் உச்சகட்டத்தை அடையலாம் என எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளது மக்களிடையே மேலும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

மேலும் வாசிக்க: ஆதார் இல்லாத ‘குடி’மகன்கள் வசதிக்காக நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

இது குறித்து கூறும்போது, “கொரோனா அதிகரித்து வரும் விதம், புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது ஜூன், ஜூலை மாதங்களில் இதன் பாதிப்பு புதிய உச்சத்தை எட்டும். இந்த புள்ளி விவரம் கவலை தருகிறது.

ஆனால் கொரோனாவின் தாக்கத்தில் மாற்றங்கள் உள்ளன. எனினும் அப்போது தான் கோவிட்-19 நோயின் தாக்கமும், ஊரடங்கு மற்றும் ஊரடங்கு நீட்டிப்பின் அவசியம் நமக்கு புரிய வரும்.

இந்தியாவில் மொத்தம் 327 அரசு சோதனை மையங்கள் மற்றும் 188 தனியார் கொரோனா சோதனை மையங்கள் உள்ளது. 13,57,442 கொரோனா சோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக அந்தமான் நிக்கோபார், அருணாச்சலப்பிரதேசம், சட்டீஸ்கர், கோவா, ஜார்கண்ட், இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் , கேரளா, மணிப்பூர், மேகாலயா, ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் கேஸ்கள் எதுவும் பதிவாகவில்லை.

காண்டாக்ட் டிரேசிங் முறையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் மிக முக்கியமாக கட்டுப்பாட்டு முறைகளில் நாம் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும்” என டாக்டர் ரன்தீப் தெரிவித்துள்ளார்.