சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் தொல்.திருமாவளவன்.
திமுக கூட்டணியில் ஏற்கெனவே மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவிற்கு அதிக தொகுதிகள் எதிர்பார்த்த நிலையில், 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதற்கு விசிக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பிய நிலையில், விசிக நிர்வாகிகள் தொண்டர்களை சமாதானம் செய்தனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன், “6 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும். 6 தொகுதிகளை பெற விடுதலை சிறுத்தைகள் கட்சியில் எதிர்ப்பு இருந்தாலும் வாக்குகள் சிதறக்கூடாது என உடன்பாடு ஏற்பட்டது.
தமிழகத்தை சனாதன பேராபத்தில் இருந்து காப்பாற்ற திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். தமிழகத்தில் பாஜக, சங்பரிவார அமைப்புகளால் காலூன்ற முடியாத நிலை உள்ளது. கலைஞர், ஜெயலலிதா இல்லாத தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த பாஜக முயற்சி செய்கிறது.
புதுச்சேரியில் அநாகரிக அரசியலால் காங்கிரஸ் ஆட்சியை பாஜக கவிழ்த்துள்ளது. அதுபோன்று தமிழகத்தை மாற்ற பாஜக தீவிரமாக செயல்படுகிறது. 2017ல் இருந்தே திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்திகள் கட்சி இணைந்து செயல்பட்டு வருகிறது . திமுக வழங்கிய 6 தொகுதிகளை ஏற்று போட்டியிடுவது என்று முடிவெடுத்துள்ளோம்.
6 தொகுதிகளில் பொதுத் தொகுதி உள்ளதா என்பது குறித்து பிறகு பேச்சுவார்த்தை நடத்துவோம். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒரு விளக்கு 21,666 ரூபாய்- RTI அதிர்ச்சி தகவல்