குஜராத் கடல் பகுதிக்குள் நுழைந்த ‘யாசீன்’ என்ற பாகிஸ்தான் படகை பறிமுதல் செய்ததுடன் அதில் இருந்த 10 பேரை இந்திய கடலோர காவல் படை கைது செய்துள்ளது.

இதுகுறித்து குஜராத் கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “அரபிக் கடல் பகுதியில் கடலோர காவல் படைக்கு சொந்தமான அங்கித் கப்பல் சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது 6 மைல் தூரத்துக்கு இந்திய கடல் பகுதிக்குள் ஒரு படகு வந்து கொண்டிருந்ததை கடலோர காவல் படையினர் கவனித்தனர். இதனிடையே, நமது கப்பலைப் பார்த்தவுடன் அந்தப் படகில் இருந்தவர்கள் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் விரட்டிச் சென்ற நமது படையினர் அந்தப் படகை சிறைபிடித்தனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ‘யாசீன்’ என்ற அந்தப் படகில் இருந்த 10 பேரை கைது செய்ததுடன், 2 ஆயிரம் கிலோ மீன்கள், 600 லிட்டர் எரிபொருளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்தப் படகு மற்றும் அதில் இருந்தவர்களை போர்பந்தர் நகருக்கு அழைத்து வந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார்.

குஜராத் கடல் பகுதியில் அடிக்கடி இதுபோன்ற சம்பவம் நடைபெறுவதாலும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாலும் இந்திய-பாகிஸ்தான் கடல் பகுதியில் ரோந்து பணியை மேலும் பலப்படுத்துமாறு கடற்படை தலைவர் வி.எஸ்.பதானியா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2021 செப்டம்பர் 15 ஆம் தேதி இதே குஜராத் கடல் பகுதியில் 12 பேருடன் பாகிஸ்தான் படகை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். அதேபோல் கடந்த 2021 டிசம்பர் 20 ஆம் தேதி குஜராத் கடல் பகுதியில் பாகிஸ்தான் நாட்டிற்குச் சொந்தமான படகில் இருந்து சுமார் ரூ 400 கோடி மதிப்பிலான 77 கிலோ ஹெராயின் போதைப் பொருட்களுடன் 6 பேரை இந்தியக் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் கடந்த 2021 செப்டம்பர் மாதம் அதானிக்கு சொந்தமான குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக ரூ.21,000 கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் (3 டன்) சிக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.