செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்டார் ஷிப்’ ராக்கெட் சோதனையை நிறைவு செய்த சில நொடிகளில் வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் வகையில், எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், அடுத்த தலைமுறை ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகளை தயாரித்து சோதனை செய்து வருகிறது.

அந்தவகையில் செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கக்கூடிய ‘ஸ்டார் ஷிப்’ விண்கலத்தின் முன்மாதிரி நேற்று (மார்ச் 03) அறிமுகம் செய்யப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள போகா சிகா ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

வெற்றிகரமாக பயணத்தை தொடங்கிய ஸ்டார் ஷிப் பின்னர் சிறிய தடுமாற்றத்துடன் தரையிறங்கியது. ஆனால் நிலத்தை தொட்ட சில நொடிகளில் ராக்கெட் தீப்பிடித்து சுக்குநூறாக வெடித்து சிதறியது. 3 என்ஜின்களும் அடுத்தடுத்து செயலிழந்ததே விண்கலம் வெடித்து சிதற காரணம் என்று கூறப்படுகிறது.

ராக்கெட் வெடித்துள்ள போதும் தங்களது எதிர்கால ஆய்வுக்கு தேவையான முக்கிய விவரங்கள் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டுள்ளதாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விண்வெளிக்கு அமெரிக்காவில் இருந்து முதன்முறையாக மனிதர்களை அனுப்பும் தனியார் நிறுவனம் என்ற பெயரை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் மனிதர்களை அனுப்ப வேண்டும் என்பதே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கனவு. இந்த திட்டத்திற்காகவே வடிவமைக்கப்பட்டது தான் ஸ்டார்ஷிப் ராக்கெட்கள்.

ஏற்கனவே இரண்டு முறை நடத்தப்பட்ட சோதனையில், வெற்றிகரமாக புறப்பட்டு இலக்கை அடைந்த ராக்கெட் தரையிறங்கும்போது வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது.

செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர்..