மணிரத்னம் இயக்கும் “பொன்னியன் செல்வன்” படத்தில் பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கல்கியின் பொன்னியன் செல்வன் நாவலை இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக இயக்குனர் மணிரத்னம் உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் ரூ. 800 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை லைகா தயாரிப்பதாக கூறப்படுகிறது.

பிரம்மாண்ட வரலாற்று நாவலான பொன்னியன் செல்வன் நாவலில் மொத்தம் 60 பிரதான கதாபாத்திரங்கள் கொண்ட இந்த நாவலில் ராஜராஜ சோழனின் தந்தையார் சுந்தர சோழன், அண்ணன் ஆதித்த கரிகாலன், அக்கா குந்தவை, குந்தவையின் காதல் கணவன் வந்தியத் தேவன், ராஜராஜ சோழனின் மனைவி வானதி, சோழ அரசுக்குள் அடங்கிய குறுநில மன்னர்களில் ஒருவரான பழுவேட்டரையர், ராஜராஜ சோழனின் அன்புக்கு பாத்திரமான வீரம் மிக்க ஈழத்து அழகி பூங்குழலி, தந்திரம் மிக்க ஆழ்வார்கடியான், வீரபாண்டியனுக்காக சோழ சாம்ராஜ்யத்தை ஆட்டுவித்த நந்தினி உள்பட 10 கதாபாத்திரங்கள் முக்கியமானவை.

இதில் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கிறார், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் அல்லது நயன்தாரா நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. சுந்தரச் சோழ மகாராஜனாக அமிதாப் பச்சன் நடிக்கிறார். அதேபோல ஆதித்த கரிகாலராக விக்ரம் நடிப்பார் என்று தெரிகிறது. அருண் மொழி வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிப்பதாக சொல்லப்படுகிறது. இவை தவிர நந்தினி என்கிற வில்லி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.

நந்தினியின் கணவன் மற்றும் குறுநில மன்னன் பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் முதன்முறையாக சத்யராஜுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.

மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான ஆழ்வார்கடியான் வேடத்தில் பாரதிராஜா நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவைதவிர மதுதாரந்தகன், சேந்தன் அமுதன், வானதி, மந்தாகினி போன்ற பொன்னியன் செல்வனின் மற்ற வரலாற்று சிறப்பு மிக்க கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.