தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65வது பொதுக்குழு கூட்டம் நேற்று மதியம் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. தலைவர் நாசர் தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, நடிகை ஸ்ரீதேவி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைவர் நாசர் பேசியதாவது: “நடிகர் சங்க கட்டிடப் பணிகள் பாதிக்கப்படும் என்பதால், அடுத்த 6 மாதத்திற்கு தேர்தல் ஒத்தி வைக்க வேண்டுமென்று 10க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கடிதம் கொடுத்துள்ளனர். இது குறித்து சட்டப்படி முடிவெடுப்போம். தேர்தலுக்கு பின்வாங்கவில்லை, நாளையே தேர்தல் வைத்தாலும் எதிர்க்கொள்வோம்” என்றும் கூறினார்.

பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் விஷால் பேசியதாவது : “அடுத்த மார்ச் மாதம் கட்டிட வேலைகளை முடித்து திறப்பு விழா நடத்த முடிவு செய்துள்ளோம். நடிகர் சங்க தேர்தலும் புதிய கட்டிடத்திலேயே நடைபெறும். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க மேலும் ரூ.20 கோடி தேவைப்படுகிறது. எனவே நட்சத்திர கலைநிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். சர்வதேச தரத்தில் இந்த கட்டிடமும் அரங்குகளும் கட்டப்பட்டு வருகிறது” என்றார்.

இதுகுறித்து நடிகர் ஆனந்தராஜ் பேசுகையில், தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை மாற்றக்கூடாது, தேர்தல் நடத்தக் கூடாது என்பதில் தனக்கு உடன்பாடில்லைஎன்றார்.

நடிகர் எஸ்.வி. சேகர் கூறியதாவது, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடிகர் சங்க தேர்தல் நடத்த வேண்டும். 80களில் இருந்து நடிகர் சங்க உறுப்பினரான என்னை நீக்கியது செல்லாது. என் உரிமைக்காக இங்கு வந்திருக்கிறேன். கட்டிடம் கட்டிவிட்டு தான் தேர்தல் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றார்.

வரும் அக்டோபர் மாதத்துடன் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிகிற நிலையில் தேர்தலை 6 மாதத்திற்கு ஒத்தி வைக்க பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்த தேர்தலுக்கு போட்டியிட ஏற்கனவே சங்கத்தில் இருந்த சரத்குமார், ராதாரவி அணியினர் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.