மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மீது மிகுந்த பற்றுக் கொண்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் திரைப்படத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் கருணாநிதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், திமுக தலைவராக இருந்த கலைஞரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டால், தான் கருணாநிதியாக நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “கருணாநிதி, பல நூற்றாண்டுகளுக்கான தலைவர், இன்னும் பல ஆண்டுகளுக்கு அவரைப் போன்ற ஒரு அரசியலில் ஆளுமையுடைய, பன்முகத் தன்மை கொண்ட ஒரு தலைவர் உருவாகப் போவதில்லை.

அவருடைய 80 ஆண்டு கால வாழ்க்கையை நான் வாழ்ந்து பார்க்க முடியாது. ஆனால், அவருடைய கதாபாத்திரத்தை ஏற்று ஒரு படத்தில் நடித்துப் பார்க்க ஆசைப்படுகிறேன். அப்படியொரு வாய்ப்புக் கிடைக்குமா என தெரியவில்லை. ஒருவேளை அப்படி ஒரு வாய்ப்பை எனக்கு யாரேனும் வழங்கினால், அது எனக்கு கிடைத்த வரப்பிரசாதமாக நினைத்து மகிழ்வேன்” என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.

முன்னதாக கலைஞரின் புகழுக்கு வணக்கம் செலுத்தும் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றபோது கலந்து கொண்டு பேசிய பிரகாஷ் ராஜ், ஒரு நடிகனாக திராவிட திருநாடின் கலைஞனாக இருவர் படம் எனக்கு அங்கீகரம் கொடுத்தது. அது மட்டுமல்ல இன்று வரை அடையாளமாகவும் இருக்கிறது.

அவர் எழுதிய சங்கத் தமிழில் நூலில் உள்ள புறநானுற்றுக் கவிதை ஒன்றை எடுத்து பயிற்சி செய்தேன். நான் தமிழ் கற்க தொடங்கியது அங்கிருந்துதான். கலைஞரின் தமிழை புரிந்து கொள்வதை உணர்ந்து கொண்டேன். இங்கிருந்துதான் எங்களுக்குள் அறிமுகம் தொடங்கியது.

கலைஞர் மெளனித்த பிறகுதான் என்னைப் போன்றவர்கள் மதவாதத்தை எதிர்த்துப் பேச ஆரம்பித்துள்ளோம். ஒரு நாடு ஒரு மொழி போன்றவற்றை எதிர்க்க ஆரம்பித்திருக்கிறோம். இது அவர் இருந்தவரை நம்மை பாதுதகாத்திருக்கிறார் என்ற உண்மையை நம் கன்னத்தில் அறைகிறது.

காந்தி என்றால் அகிம்சை என்பது போல கலைஞர் என்றால் சமூக நீதிதான் நினைவுக்கு வரும். அவர் கொண்டு வந்த அத்தனை சமூக நீதித் திட்டங்களையும் அனைத்து மாநிலங்களிலும் அமலாக்கப்பட்டுள்ளன” எனக் கூறியிருந்தார்.

மேலும் இந்துக் கடவுள்களையும், பசுவையும் பற்றி அவதுாறாகப் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கு குறித்து கேட்டபோது, “கோழைகள்தான் இவ்வாறு செயல்படுவார்கள். இதுபோன்ற வழக்குகளைக் கண்டு நான் பயப்படப் போவதில்லை” என்றும் பிரகாஷ்ராஜ் கூறினார்.