மக்கள் நலன் கருதி மதுக்கடைகளை, பகுதி அளவில் அரசு மூட வேண்டும்; அப்படி செய்தால், ஒரு நாள் மதுவிலக்கு அமலாகும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், 2009 மார்ச் 31 ஆம் தேதி நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2011 மார்ச் 29 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி என்.கிருபாகரன், பணியில் இருந்து நாளை (ஆகஸ்ட் 19) ஓய்வு பெறுகிறார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், நேற்று பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், பிரிவு உபச்சார உரை நிகழ்த்தினார். இதில், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு நீதிபதி கிருபாகரனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவில் பேசிய நீதிபதி கிருபாகரன், “நான், ஒரு போதும் என்னை நீதிபதியாக நினைத்துக் கொண்டதில்லை; சாதாரண நபராகவே இருந்தேன். வழக்கறிஞர் மற்றும் நீதிமன்றத்தின் மேன்மை காக்கப்படவில்லை எனில் மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர்.
சுதந்திர போராட்ட காலத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள் மேன்மையை மீண்டும் கொண்டு வர வேண்டும். சென்னையில், 125 வயது உடைய உயர்நீதிமன்ற கட்டடத்தில், நீதிபதியாக பணியாற்றியது பெருமையாக உள்ளது.
இளம் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் தொழிலின் புனிதத்தை மீட்டெடுக்க வேண்டும். ஒவ்வொரு வழக்கறிஞரும், ஒரு மூத்த வழக்கறிஞரிடம், மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் வரை பயிற்சி எடுக்க வேண்டும். அவ்வாறு வருவோரை, தன் குழந்தையை போல நினைத்து, சிறப்பான வழக்கறிஞரை, மூத்த வழக்கறிஞர்கள் உருவாக்க வேண்டும்.
நீதிபதியாக பணி ஓய்வு பெறுவது திருப்தியாக இருந்தாலும், வழக்கறிஞர் தொழிலை முறைப்படுத்த முடியாதது, டாஸ்மாக் கடைகளை மூட முடியாமல் போனது, நிறைவை அளிக்கவில்லை. மக்கள் நலன் கருதி, மதுக்கடைகளை பகுதி அளவில் அரசு மூட வேண்டும்; அதன் வாயிலாக, ஒரு நாள் மதுவிலக்கு அமலாகும்.
[su_image_carousel source=”media: 25795,25796″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]
டெல்லியும், மும்பையும் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. மண்டல வாரியான கிளைகளை அமைப்பது குறித்து, உச்ச நீதிமன்றம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். விழா நிறைவில், உயர் நீதிமன்றம் சார்பில் நீதிபதி கிருபாகரனுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
நீதிபதி கிருபாகரன் தனது 12 ஆண்டு நீதிபதி பணிக்காலத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு அமர்வுகளுக்குத் தலைமை வகித்துள்ளார். நீதிபதி கிருபாகரன் வழங்கிய முக்கிய தீர்ப்புகளில் சில;
தமிழ்நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என 2015 ஆம் ஆண்டு தீர்ப்பளித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.
அதேபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் ஜெ.தீபா, ஜெ.தீபக் எனத் தீர்ப்பளித்தவர் நீதிபதி கிருபாகரன்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், அவர் மனைவி நளினி ஆகியோர் இலங்கை மற்றும் இங்கிலாந்தில் இருக்கும் உறவினர்களுடன் போனில் பேசுவதற்கு அனுமதி வழங்கினார்.
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அவசரச் சட்டம் மற்றும் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு திருத்தச் சட்டம் ஆகிய இரண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக மாதக்கணக்கில் காத்திருந்தன. அப்போது, அது தொடர்பான வழக்குகளில் நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த அடுத்தடுத்த உத்தரவுகளால் அவசரச் சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் 3 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்திருந்தார் நீதிபதி கிருபாகரன்.
ஆதிச்சநல்லூர், சிவகளை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளவும், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் எனப் பல்வேறு வழக்குகளில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
மேலும் நீதிபதி பணியின் கடைசி நாளான இன்று (ஆகஸ்ட் 19) மைசூருவில் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் ஆவணங்கள் மற்றும் கல்வெட்டுகளைச் சென்னைக்கு மாற்ற வேண்டும். சென்னையில் உள்ள மத்திய கல்வெட்டியல் பிரிவுக்கு, தமிழ் கல்வெட்டியல் பிரிவு எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக எம்பி.க்களுக்கு ஒன்றிய அரசு இந்தி மொழியில் கடிதம் அனுப்புவதை எதிர்த்த வழக்கில், எம்பி.க்கள் எந்த மொழியில் கடிதம் அனுப்புகிறார்களோ, அந்த மொழியில் தான் ஒன்றிய அரசு கடிதம் அனுப்ப வேண்டும் என்ற அதிரடி உத்தரவையும் பிறப்பித்தார் நீதிபதி கிருபாகரன்.
சமூகப் பிரச்சினை சார்ந்த வழக்குகளில் பிறப்பித்த உத்தரவுகள், விசாரணையின்போது தெரிவிக்கும் கருத்துகளால் மக்கள் மத்தியில் புகழ்பெற்று, ‘மக்கள் நீதிபதி’ என்று அன்புடன் அழைக்கப்படும் நீதிபதி என்.கிருபாகரன், நாளை (ஆகஸ்ட் 20) ஓய்வு பெறுகிறார்.
உயிர் பெறுகிறது ராம்குமார் மரண வழக்கு: விசாரணையை தொடங்கிய மனித உரிமைகள் ஆணையம்