இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் கடந்த நிலையில், இன்று பாதிப்பு 62,099 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,25,338 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 904 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ள நிலையில், மொத்தம் இதுவரை 41,634 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் புதிதாக 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,79,144 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,091 பேருக்கும், சென்னையைத் தவிர்த்து, செங்கல்பட்டில் 408 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 336 பேருக்கும், திருவள்ளூரில் 320 பேருக்கும், தேனியில் 297 பேருக்கும் இன்று கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 110 பேர் உயிரிழந்தனர். அதில், 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 88 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 4,571 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 67,153 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை ஒட்டுமொத்தமாக 30 லட்சத்து 20 ஆயிரத்து 714 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க: காஷ்மீரில் பாஜக கொண்டாட்டங்களுக்கு மட்டும் அனுமதி; கொந்தளித்த உமர் அப்துல்லா