மசூதியில் தொழுகை நடத்த முஸ்லிம் பெண்களை அனுமதிக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது ஆண்களும், குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
 
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்தாண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில், சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் வழிபாட்டுக்கு அனுமதிக்கலாம் என்று கூறியது.
 
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், புனேவை சேர்ந்த முஸ்லிம் தம்பதியர் மசூதிகளில் தொழுகை நடத்துவதற்கு முஸ்லிம் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
 
இந்த மனுவில் , ‘மசூதிக்குள் முஸ்லிம் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க மறுப்பது சட்ட விரோதமானது, அரசியலமைப்புக்கு எதிரானது. எனவே, பெண்களை மசூதிக்குள் அனுமதிப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  
 
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு, ‘வெளிநாடுகளில் உள்ள மசூதிகளில் பெண்கள் தொழுகைக்கு அனுமதிக்கப்படுகிறார்களா?’ என கேள்வி எழுப்பினார்கள்.
 
இதற்கு பதில் அளித்த மனுதாரரின் வழக்கறிஞர், ‘‘இஸ்லாமியர்களின் புனிதத்தலமான மெக்கா, கனடாவில் பெண்கள் மசூதிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்’’ என்றார்.
 
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் அமர்வு, ‘இந்த வழக்கை நாங்கள் விசாரணைக்கு ஏற்பதற்கான காரணம், சபரிமலை கோயில் விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தான்.
 
மசூதிக்குள் முஸ்லிம் பெண்களை அனுமதிப்பது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.