அகமதாபாத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 70 வயது முதியவரின் உடல், மருத்துவமனைக்கு அருகே உள்ள பேருந்து நிலையத்தில் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது குஜராத். அங்கு இதுவரை 11,380 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 659 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அகமாதாபாத் சிவில் மருத்துவமனையில் கடந்த மே 10ஆம் தேதி குன்வந்த் மக்வானா என்ற 70 வயது முதியவர் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸுக்கான அறிகுறிகளும் இருந்த காரணத்தால் சோதனையும் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் வாசிக்க: கிருமிநாசினி தெளிப்பதால் கொரோனா அழியுமா.. விளக்கமளிக்கும் WHO

பரிசோதனைக்கான முடிவுகள் வருவதற்கு முன்பே அந்த முதியவர் உயிரிழந்திருக்கிறார். அதன் பிறகு, எவ்வித பாதுகாப்பு ஏற்பாடும் செய்யாமல், அவரின் உடலை பொதுவெளியில் தூக்கி எறிந்திருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். ஆனால், சோதனை முடிவில் முதியவருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, பேசியுள்ள முதியவரின் மகனான கிர்தி மக்வானா, எனது தந்தையின் உடல்நிலை எப்படி இருக்கிறது என அனுமதித்த நாள் முதல் எதையுமே மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. அவரை காண எங்களையும் அனுமதிக்காமல் வீட்டுக்குச் செல்லும்படி கூறினர்.

அதன் பிறகு, தானிலிம்டா பேருந்து நிலையம் அருகே அதிகாலை 3 மணியளில் போலிஸார் எனது தந்தையின் இறந்த உடல் இருப்பதை அறிந்து பிரேத பரிசோதனைக்காக எஸ்.வி.பி. மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றிருக்கிறார்கள். அங்கு சென்றபோது, எனது தந்தை கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார் என தெரிவித்தார்கள். ஆனால் எங்கு, எப்போது என்று எங்களுக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. மேலும், உடற்கூறாய்வு செய்ததன் அறிக்கையும் ஒப்படைக்கவில்லை.

மேலும், இறந்தவரின் உடலை கொண்டுச் செல்வதற்கான எவ்வித பாதுகாப்பு ஏற்பாடு, ஆம்புலன்ஸ் என எந்த உதவியையும் மருத்துவமனை தரப்பு செய்து தரவில்லை. ரூ.1500 கொடுத்து பிளாஸ்டிக் கவர் வாங்கி எனது தந்தையின் உடலை மூடினோம். வார்டு பாயிடம் ரூ.200 கொடுத்து உடலின் மீது கிருமி நாசினியை தெளிக்க வைத்தோம். மருத்துவமனை தரப்பிடம் கையுறை, மாஸ்க் கேட்டதற்கு நீங்களேதான் வாங்கிக்கொள்ள வேண்டும் என அலட்சியமாகவே பதிலளித்தார்கள் என மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார் கிர்தி.

மேலும் வாசிக்க: கொரோனா நோயாளிகளுக்கு தனி வார்டு சர்ச்சை- குஜராத் முதல்வரின் மன்னிப்பு கோருகிறது மெடிகோஸ்

ஆனால், அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் பிரபாகர் கூறும் போது, மே 14ம் தேதி குன்வந்த் மக்வானா உயிருடன் இருக்கும்போதே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டார். அவர் மருத்துவமனையில் இறக்கவில்லை என்று கூறிவுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி, பேருந்து நிலையத்தில் சடலமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அகமதாபாத் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.