இந்தியாவில் இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,155 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மேலும் வாசிக்க: மே 31 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கு… தளர்வுகளும் கட்டுப்பாடுகளும்

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் 1-வது இடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மட்டும் 2033 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 35,086 ஆக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக மும்பையில் மட்டுமே 20,150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மொத்தம் 7,125 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

3-வது இடத்தில் உள்ள குஜராத்தில் இன்று 366 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் குஜராத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,746 ஆக உள்ளது. ஆனால் குஜராத்தில் கொரோனா மரணங்கள் இந்திய அளவில் 2-வது இடத்தில் உள்ளது. மொத்தம் 694 பேர் குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் டெல்லியில் மொத்தம் 10,054 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கினறனர். ராஜஸ்தானில் 5,507 பேரும் மத்திய பிரதேசத்தில் 5,236 பேரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.