மே மாதத்திற்கான மின்சார கட்டணத்தைப் பொதுமக்களே கணக்கிட்டு, வாட்ஸ் அப் வழியாக போட்டோ அனுப்பி, இணையவழியில் மின் கட்டணத்தை செலுத்தலாம் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக மின் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் வீடுகளுக்கு வந்து கணக்கெடுத்துக் குறித்துக் கொள்வார். அத்துடன் வீட்டில் வைத்திருக்கும் அட்டையிலும் எழுதிக் கொடுப்பார். அதன் அடிப்படையில் நுகர்வோர் மின்கட்டணத்தை நேராக மின்சார அலுவலகத்தில் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்துவது வழக்கம் ஆகும்.

ஏற்கனவே மே மாதம் கணக்கீடு செய்ய அதிகாரிகள் வரவில்லை என்றால் 2019 ஆம் ஆண்டு மே மாதம் செலுத்திய கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும், ஒருவேளை 2019 மே மாதத்திற்குப் பிறகு மின் இணைப்பு பெற்றிருந்தால் கடந்த மார்ச் மாதத்திற்கான தொகையைக் கட்டலாம் என்றும் தமிழக மின்வாரியம் தெரிவித்திருந்தது. இந்த தகவல் மக்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியது.

இந்நிலையில் நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுய மதிப்பீடு செய்து செலுத்தலாம் என தமிழக அரசின் மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுய மதிப்பீடு கணக்கீடு செய்து கொள்ளலாம்.

பொதுமக்கள் சுயமாக மதிப்பிட்டு, அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் வழியாக மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். வாட்ஸ் அப் வழியாக போட்டோ அனுப்புவோர் தங்களுக்கான மின் கட்டணத்தை இணையவழியில் செலுத்த வேண்டும்.

மே மாதத்துக்கான மின் கட்டணம் ஏற்கனவே கணக்கிடப்பட்டிருந்தால் மின்சார வாரிய உதவி பொறியாளரும், உதவி கருவூல அலுவலரும் அதை நீக்க வேண்டும். பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டு கட்டணங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, அவசியம் எழுந்தாலோ, மீண்டும் ஒருமுறை மின்சார வாரிய பணியாளர்களே ரீடிங் எடுப்பார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டி நிறுவனம் முறைகேடு; 20,000 டன் துவரம் பருப்பு டெண்டரை ரத்து செய்து தமிழக அரசு அதிரடி