பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை, இதுகுறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டுமென சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட ஏழு பேர் சுமார் 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்யக்கோரி பல அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதில் முக்கியமாக, பேரறிவாளனை விடுவிக்க வலியுறுத்தி அவரது தாயார் அற்புதம்மாள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார். பேரறிவாளனை விடுவிக்க வேண்டுமென மீண்டும் அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் சில தினங்களுக்கு முன் குரல் எழுப்பினர்.

ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இவ்விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. ஆனால் ஆளுநரோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தீர்மானத்தை கிடப்பில் போட்டுள்ளார்.

முதல்வர் மற்றும் அமைச்சர்களும் ஏழு பேர் விடுதலை குறித்து கேள்வி எழுப்பினால் அது ஆளுநர் கையில் இருக்கிறது என பதில் கூறுகின்றனர். இந்நிலையில், பேரறிவாளன் விடுதலையில் சிபிஐக்கு எந்த பங்கும் இல்லை என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், “பேரறிவாளன் விடுதலையில் சிபிஐக்கு எந்த தொடர்பும் இல்லை. பேரறிவாளனுக்கும் தற்போது நடைபெறும் விசாரணைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரது விடுதலை குறித்து தமிழக ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு வெளியிட்ட மு.க.ஸ்டாலின்