இட ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மிகக் குறைவு. ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரியில் லட்சக்கணக்கான ரூபாய் கல்விக் கட்டணம் என்ற நிலையில், அரசு பள்ளிகளில் படித்து, இட ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள பெரும்பாலான மாணவர்கள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவ்வளவுத் தொகையைக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் கிடைத்தும், சேர முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் இட ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “நீட் தேர்வில் மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டின்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 227 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதற்குரிய கட்டணத்தை அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்கள் செலுத்த முடியாத நிலை இருப்பதால், அவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதிமுக அரசை, மாணவர்களும் பெற்றோரும் நம்பியிருந்த நிலையில், மருத்துவக் கனவு மீண்டும் சிதைக்கப்பட்டுவிடுமோ என்ற மனப் பதற்றத்திற்கும் அச்சத்திற்கும் ஆளாகி இருக்கின்றனர்.

அவர்களின் துயர் துடைக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும் என்பதை நினைவூட்டும் அதே நேரத்தில், மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள தி.மு.கழகம், இந்தக் கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை முழுமையாக ஏற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமையவிருக்கின்ற திமுக ஆட்சியில், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதற்குரிய சட்ட நடவடிக்கைகள் உறுதியாக மேற்கொள்ளப்பட்டு, அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, கிராமப்புற ஏழை, பின்தங்கிய ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மாணவமணிகளின் மருத்துவக் கனவும் திமுக நிச்சயமாக நிறைவேற்றும் என்ற உறுதியினை இப்போதே வழங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்ட 3 மணி நேரத்தில், அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியலில் முறைகேடு சர்ச்சை