கொரோனா பரவுதல் பற்றி சிறிதும் கவலைபடாமல் ஊரடங்கை மதிக்காமல் கேக் வெட்டி, பிரியாணி விருந்து வைத்து பிறந்த நாளை கொண்டாடி உள்ளார் கர்நாடகா பாஜக எம்எல்ஏ.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தும் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியவில்லை. இந்தியாவில் 7500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கினை மேலும் தொடர வேண்டும் என மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசும் மாநில முதல்வர்களின் கோரிக்கையை பரிசீலித்து வரும்நிலையில், கர்நாடகா உட்பட ஒடிசா, பஞ்சாப், மஹாரஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மக்களின் நலன் கருதி ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீடித்துள்ளன.

இதில் ஆளும் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் அனைத்து விதிகளையும் மீற தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். கர்நாடகா தும்கூர் மாவட்டம் இடகுரு கிராமத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஏஎஸ் ஜெயராம் தன்னுடைய 51வது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாட திட்டமிட்டு அக்கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் நூற்றுக்கணக்கானோரை வரவழைத்து கேக் வெட்டி கொண்டாடினார் உள்ளார்.

ஜெயராம் பிறந்த நாள், ஹனுமன் ஜெயந்தியுடன் இணைந்ததால் ஆஞ்சனேய ஸ்வாமி கோயிலில் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. 500-க்கும் மேற்பட்டோருக்கு பிறந்தநாள் கொண்டாடத்திற்காக பிரியாணி விருந்தும் வைத்துள்ளார்.

இதில் முக்கியமாக பிறந்த நாள் விழாவில் பேசியபோது, கொரோனா தொற்றில் இருந்து மக்கள் எப்படி தங்களை காத்து கொள்ள வேண்டும், வீடுகளுக்குள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்ததுதான்.

ஊரடங்கு நேரத்தில் உயிர் இழந்தால், துக்க நிகழ்வுகளுக்கு கூட சென்று வர முடியாத சூழலில், ஆளும் கட்சியான பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ இப்படி ஊரை அழைத்து விருந்து வைத்து பிறந்த நாள் கொண்டாடியது பொதுமக்களிடையே சர்ச்சையும் கோபத்தையும் எழுப்பியுள்ளது.