இஸ்லாமிய பெண்களை அவமானப்படுத்துவதும் நோக்கில், அவர்களின் புகைப்படங்களை மோசமாக சித்தரித்து ஏலம் விடுவதாக அறிவித்த ‘புல்லி பாய்’ (Bulli Bai) என்னும் செயலியை உருவாக்கிய 18 வயது பெண் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 1 ஆம் தேதி ஆன்லைன் தளமான ‘புல்லி பாய்’ எனும் செயலியில் பெண் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், இஸ்லாமிய பெண் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அவர்களை ஏலம் விடுவதாகவும் விளம்பரப்படுத்தப்பட்டது.

இதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளர் தன்னுடைய புகைப்படத்தை மாற்றம் செய்து தவறான முறையில் செயலியில் பதிவிட்டுள்ளதாகக் கூறி உரிய ஆதாரங்களுடன் டெல்லி காவல்துறையில் புகார் செய்து, அதன் நகலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

ஆன்லைன் செய்தி இணையதளத்தில் பணிபுரியும் அந்தப் பெண் பத்திரிகையாளர், சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் ‘இஸ்லாமிய பெண்களைத் துன்புறுத்தவும் அவதிக்கவும் முயல்கிற அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக உடனடியாக முதல் தகவலறிக்கை பதிவு செய்ய வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் புல்லி பாய் என்ற இணையதளம்/ போர்ட்டலில் என்னைப் பற்றிய தவறான, ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் ஆபாசமான சூழலில் எனது படம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதற்கு உடனடி நடவடிக்கை தேவை, ஏனெனில் இது என்னையும் அதேபோன்று இருக்கும் மற்ற சுதந்திரமான பெண்கள் மற்றும் பத்திரிகையாளர்களையும் துன்புறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு டிவிட்டரில் பதில் அளித்துள்ள டெல்லி காவல்துறை, இந்த விவகாரம் குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது. மேலும் ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், சம்மந்தப்பட்ட புல்லி பாய் செயலி முடக்கப்பட்டடதாக கடந்த ஞாயிறு பிற்பகல் தெரிவித்தார்.

இதனையடுத்து மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் ‘புல்லி பாய்’ செயலியின் நிறுவனர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றில் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து விசாரித்த மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர், பெங்களூருவை சேர்ந்த இந்துத்துவா ஆதரவாளரான பொறியியல் மாணவர் விஷால் ஜா (வயது 21) என்பவர் இதன் பின்னணியில் இருப்பதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து பெங்களூரு விரைந்த மும்பை காவல்துறையினர் விஷால் ஜாவை கைது செய்து, மும்பைக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் மும்பை இணைய குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ரஷ்மி கரண்டிகர் நடத்திய விசாரணையில், விஷால் ஜா தன்னுடன் அரசியல் ரீதியாக முரண்பாடு கொண்ட பெண் ஆளுமைகளை ஏலம் விடுவதாக அறிவித்ததாக ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த செயலியை இவர் மட்டும் தனியாக நடத்தவில்லை. இந்த செயலி தொடங்குவதில் மாஸ்டர் மைண்டாக இருந்த உத்தராகண்ட் மாநிலத்தின் உதம் சிங் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வேதா சிங் (வயது 19) என்ற பெண்ணையும் மும்பை இணைய குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த வழக்கில் 3வது நபராக உத்தராகண்ட்டைச் சேர்ந்த மாணவர் மயங்க் ராவல் (வயது 21) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மூவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்துள்ளதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் உண்மையில் ஏலம் அல்லது விற்பனை எதுவும் அந்த ஆப் மூலம் நடைபெறாத நிலையில், இந்த செயலியின் நோக்கம் முஸ்லிம் பெண்களை அவமானப்படுத்துவதும் மிரட்டுவதுமாக இருந்தது எனக் கூறப்படுகிறது. அவர்களில் பலர் சமூக வலைதளங்களில் செயல்படும் முன்னனி சமூக செயல்பாட்டளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ‘சல்லி டீல்ஸ்’ என்ற செயலி மற்றும் இணையதளத்தில், 80க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்களின் சுயவிவரங்கள் பதிவேற்றப்பட்டிருந்தன. சமூக ஊடகங்களில் பதிவேற்றிய அவர்களின் புகைப்படங்களை அந்த இணையதளத்தில் பயன்படுத்தி, “இன்றைய பேரம்” (Deal of the day) என்று விவரித்த விவகாரம் சர்ச்சையானது.

இந்த இரண்டு சம்பவங்களிலும், உண்மையான விற்பனை என்று எதுவும் இல்லை. ஆனால், இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்துவதும், அவமானப்படுத்துவதும் தான் இதன் நோக்கமாக இருந்தது என காவல்துறையினர் கூறியுள்ளனர்.