ராஜ ராஜ சோழன் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை இயக்குனர் பா.ரஞ்சித்தின் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து, முன்ஜாமீன் வழங்கவும் மறுத்துள்ளது.
திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து கடந்த 5 ஆம் தேதி திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சர்ச்சையான கருத்தை பேசினார். தலித் நிலங்களை பிடுங்கியவர் ராஜ ராஜ சோழன் என்றும் தேவதாசி முறையை கையாண்டவர் ராஜ ராஜ சோழன் என்றும் அவர் கூறினார். அவரது பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது.
இதுதொடர்பாக ரஞ்சித் மீது பல காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளரே முன்வந்து ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்தார். இதில் முன்ஜாமீன் கோரி இயக்குனர் ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் இரண்டு முறை ரஞ்சித்தை கைது செய்ய தடை விதித்த நீதிமன்றம் மூன்றாவது முறை தடை விதிக்க மறுத்துவிட்டது.
இதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ரஞ்சித் தரப்பில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
தன் மீதான வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும் சாதி பிளவை ஏற்படுத்தும் வகையில் தான் பேசவில்லை, நில உரிமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே தான் பேசியதாகவும் எனவே தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் ரஞ்சித் தரப்பில் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி ரஞ்சித்தின் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துவிட்டார்.
மேலும், ராஜ ராஜ சோழன் தலித் நிலங்களை பறித்தார் என்று எந்த நோக்கத்தில் கூறப்பட்டது என்றும், ராஜ ராஜ சோழன் தலித் மக்களின் நிலத்தை பறித்தார் என்பதுதற்கு ஆதாரம் எங்குள்ளது என்றும் நீதிபதி வினா எழுப்பினார்.
பயிர் செய்வோர் நிலத்தை சொந்தமாக வைத்திருக்கலாம், பயிர் செய்யாதோர் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றுதான் நூலில் உள்ளது என்றும் நீதிபதி பாரதிதாசன் கூறினார். மேலும் ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை என்றாலும் அதற்கு ஒரு வரம்பு இல்லையா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து ரஞ்சித்தின் உரை முழுவதையும் உயர்நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய காவல் துறைக்கு நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வரும் 8 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.