தான் வைத்த கோரிக்கையை நடிகர் விஜய் மற்றும் அனிருத் உடனடியாக ஏற்றுக்கொண்டதாக இயக்குநரும், நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன், மாற்றுத்திறனாளி இளைஞர் தான்சேன், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலின் இசையை, கீபோர்டில் வாசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதைக் கண்ட இசை அமைப்பாளர் அனிருத் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

மேலும் வாசிக்க: ஒரு வருடத்துக்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம்- நடிகை ஆர்த்தி அதிரடி

இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக, நடிகர் விஜய்க்கும், அனிருத்துக்கும் டேக் செய்து, ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “இந்த இளைஞர் தான்சேன். தனது மாற்றுத்திறனாளி குழுவில் இருப்பவர். காஞ்சனா படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இந்த லாக்டவுனில் பயிற்சி செய்து ‘மாஸ்டர்’ பட பாடலை வாசித்திருக்கிறார். இவரது கனவு, அனிருத் இசையில் ஒரு சிறு பகுதியை வாசிக்க வேண்டும் என்பதும், விஜய்யின் முன்னிலையில் இசைக்க வேண்டும் என்பதுதான். இவரது கனவு நனவாக வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் அம்மாவுக்காக நான் கோயில் கட்டி 4 வருடமாகிவிட்டது. உலகில் உள்ள அனைத்து அம்மாக்களுக்கும் அந்த கோயிலை சமர்ப்பிக்கிறேன். இந்த அன்னையர் தினத்தில் நல்ல செய்தி நடந்திருக்கிறது.

தான்சேன் குறித்து பதிவிட்டு அனிருத் மற்றும் நண்பன் விஜய்க்கும் நான் வேண்டுகோள் வைத்ததை அடுத்து நேற்றிரவு, நண்பன் விஜய்யிடம் பேசினேன். லாக்டவுன் முடிந்ததும் அந்த இளைஞரை அழைத்து வந்து வாசித்துக் காட்ட சொன்னார். அனிருத்தும் வாய்ப்புக் கொடுப்பதாகக் கூறியுள்ளார். அந்த இளைஞரின் கனவு நனவாக காரணமாக இருக்கும் நண்பன் விஜய்க்கும் அனிருத்துக்கும் பெரிய நன்றி. சேவைதான் கடவுள்” என்று தெரிவித்துள்ளார்.