ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள “என்.ஜி.கே” என்கிற “நந்த கோபாலன் குமார்” திரைப்படம் வரும் மே.31ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதையடுத்து, இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை தற்போது வெளியாகியுள்ளது.

அரசியல், ஆக்சன் கலந்த இப்படத்தின் இரண்டு நிமிட டிரைலரே இன்றைய அரசியல் சூழலை அழுத்தமாக கூறியிருப்பதால் படம் முழுவதும் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

படிச்சவன் எல்லாம் ஒதுங்கி போறதனாலத்தான் நம்ம நாடே சுடுகாடா போயிருக்கு, நாம உண்மையிலேயே சுதந்திரத்தை பிரிட்டிஷ்காரன்கிட்ட இருந்து வாங்கி அரசியல்வாதிகிட்ட கொடுத்துட்டோம், எந்த ஒரு பெரிய விஷயத்தை ஆரம்பிக்கிறதா இருந்தாலும் அதோட ஆணி வேர்ல இருந்துதான் ஆரம்பிக்கணும், அது ஒரு சுடுகாடு அதுக்குள்ள போனவன் பொணம்மாத்தான் வருவான் போன்ற அழுத்தமான வசனங்களே இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைக்கின்றது

வழக்கமான செல்வராகவன் படங்களில் இருந்து கொஞ்சம் வேறுபட்டு ஆக்சன், கமர்ஷியல் இந்த படத்தில் தெரிகிறது. மொத்தத்தில் சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி இன்றைய அரசியல் சூழல் அமைந்த படம் என்பதால் அனைத்து தரப்பினர்களையும் எதிர்பார்க்க வைத்துவிட்டது என்.ஜி.கே டிரைலர்.

சென்னையில் நடைபெற்ற விழாவில் சூர்யா, செல்வராகவன், சாய் பல்லவி, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டு படத்தின் டிரெய்லர் மற்றும் இசையை வெளியிட்டனர்.