அரசு தொழிலாளர் காப்பீட்டு கழக மருத்துவமனை தொடங்கப்பட்டு 68 ஆண்டுகள் ஆகின்றன. தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் மருத்துவ வசதிகள் செய்து தருவதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள்.
 
ஆனால் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்வதை ஒரு முக்கிய வேலையாக கருதி செயல்பட்டு வருகிற அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவத்துறை விதிவிலக்கல்ல என்றும் .,
 
அரசு டாக்டர்கள் பணிமாறுதலுக்கு கலந்தாய்வு நடத்துவதில் ஊழல், அரசு மருத்துவ கல்லூரியின் முதல்வர்களுக்கு நியமனம் வழங்குவதில் ஊழல், எம்.ஜி.ஆர் பல்கலைகழக துணைவேந்தர் பதவி வழங்குவதில் ஊழல் என அனைத்து நிலைகளிலும் ஊழல் தலைவிரித்தாடி வருகிறது என்றும் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் தெரிவித்த விவரம் வருமாறு:  இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் வாங்குவதற்கு கொள்முதல் திட்டம் ரூ 13.13 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டது.
 
ஆனால் மத்திய மருத்துவ சேமிப்பு கிடங்கின் கண்காணிப்பாளர் மருந்துகளுக்கான கொள்முதல் தொகையை ரூ 40.29 கோடியாக தேவையில்லாமல் உயர்த்தி, தனியார் மருந்து நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை பிறப்பித்திருக்கிறார்.
 
இந்த ஆணை பிறப்பித்திருப்பதற்கு பின்னாலே மருத்துவ துறையின் உயர் அதிகாரிகள் செயல்பட்டிருக்கின்றனர். தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட மருந்துகள் கொண்ட நூற்றுகணக்கான அட்டைபெட்டிகள் மதுரை பிராந்திய இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் அலுவலர் அறையில் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.
 
இந்த அட்டைபெட்டிகளை வைப்பதற்கு இடமில்லாத காரணத்தால் பயன்படுத்தாத கழிவறைகளில் இவை வைக்கப்பட்டுள்ளன. இதனுடைய புகைப்படங்கள் இன்றைய ஆங்கில நாளீடு ஒன்றில் வெளிவந்துள்ளது.
 
கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே இ.எஸ்.ஐ.மருத்துவமனைகளில் ரூபாய் 27.16 கோடிக்கு தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்ததில் நடைபெற்ற ஊழல் குறித்து தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் இது குறித்து விசாரணை தொடங்கியது.
 
ஆனால் அந்த விசாரணையில் தொடக்க நிலையில் இருந்து எந்த முன்னேற்றவும் ஏற்ப்படவில்லை.
 
எனவே விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தீர்ப்பு வெளிவந்தபின்னர் தமிழகத்தில் அமையவிருக்கிற புதிய ஆட்சியில் தொழிலாளர்களுக்காக நடத்தப்படுகிற இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்காக மருந்து கொள்முதலில் ஊழல் செய்த மருத்துவ துறை அதிகாரிகள் உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் மேலும் இதில் சம்பந்தப்ப்ட்ட அதிமுகவினர் ஒருவர் விடாமல் ஆனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என கூறி உள்ளார்