தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த ‘மோடி பொங்கல்’ விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பாஜக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பாஜக சார்பில் ஜனவரி 7 முதல் 12 ஆம் தேதி வரை 1,100 இடங்களில் ‘நம்ம ஊரு பொங்கல்’ கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதன் நிறைவு விழா மதுரையில் ஜனவரி 12-ல் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று முன்னதாக தமிழ்நாடு பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை விருதுநகரில் ஜனவரி12-ல் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

அரசு நிகழ்ச்சி முடிந்ததும் மதுரை மண்டேலா நகரில் மாலை 5 மணி அளவில் நடைபெறும் மோடி பொங்கல் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பது குறித்து மாநில அரசு தான் கூற வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

மேலும் பஞ்சாப்பில் பிரதமருக்கு நிகழ்ந்திருக்கும் பாதுகாப்பு குறைபாடு, அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் அலட்சியம் தான். பிரதமரையும், அவருடன் பயணித்தவர்களையும் பாதுகாப்பில்லா சூழலுக்கு பஞ்சாப் அரசு தள்ளியுள்ளது.

சர்வதேச எல்லையிலிருந்து வெறும் 25 கி.மீ. தொலைவில், பாதுகாப்பு அச்சுறுத்தல் நிகழ்ந்த ஓர் இடத்தில் பஞ்சாப்பின் காங்கிரஸ் அரசு பெரும் நாடகத்தை நிகழ்த்தியுள்ளது. இதை கண்டித்து தமிழகத்தில் பாஜக பல அமைதி வழி அறப்போராட்டங்கள், பேரணி, வாயில் கருப்புத் துணி கட்டிய போராட்டம் என அடுத்த ஒரு வாரத்தில் முன்னெடுக்க உள்ளோம்.

இவற்றுடன் பிரதமரின் உடல் நலன் நன்றாக இருக்க, மகளிர் அணி தலைமையில் மிருக்தஞ்சய ஜெபத்தை இன்றும் நாளையும் சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் நடத்துகிறோம்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, புதுச்சேரியிலும் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி உறுதியாகவில்லை எனப் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார். ஜனவரி 12 ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் இளைஞர் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என ஆளுநர் தமிழிசை தெரிவித்திருந்த நிலையில், ”பிரதமரின் வருகை தொடர்பாக மாநில அரசுக்கு எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை” என்று ஆட்சியர் வல்லவன் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பொதுக் கூட்டத்திற்கு சென்றபோது, விவசாயிகள் போராட்டம் நடத்தியதால், பிரதமர் மோடி சாலையிலேயே 20 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்துவிட்டு டெல்லி திரும்பியது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.