சர்வதேச ஆயுத விற்பனை ஒப்பந்தத்திலிருந்து விலகவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ஆயுத உரிமைகள் அமைப்பான தேசிய துப்பாக்கி சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் அவர் பேசிய விவரம் பின் வருமாறு :
 
பாரம்பரிய ஆயுதங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை ஒழுங்குபடுத்துவதற்கான ஆயுத விற்பனை ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது.
 
எனினும், அந்த ஒப்பந்தம் தவறான வழிநடத்தலின் பேரில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தமாகும்.எனவே அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளேன்.
 
பொதுமக்கள் தங்கள் பாதுகாப்புக்காக ஆயுதங்கள் வைத்துக்கொள்ளும் உரிமையை அமெரிக்க அரசியல் சாசனம் வழங்கியுள்ளது.
 
எனினும், அந்த அடிப்படை உரிமையைத் தகர்க்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், தேசிய துப்பாக்கிச் சங்கம் போன்று ஆயுத உரிமையை நிலைநாட்டுவதற்காகப் போராடும் அமைப்புகள் இருக்கும் வரை அந்த முயற்சி வெற்றி பெறாது என்றார் அவர்.
 
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவதில் தேசிய துப்பாக்கி சங்கம் கணிசமான பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.
 
உலக அமைதியைப் பாதுகாக்கவும், ஆயுதப் பரிமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் நாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஐ.நா. கடந்த 2013-ஆம் ஆண்டு மேற்கொண்ட முயற்சியின் விளைவாக சர்வதேச ஆயுத விற்பனை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
 
இந்த ஒப்பந்தத்தில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா கையெழுத்திட்டார். எனினும், உலகின் மிகப் பெரிய ஆயுத ஏற்றுமதி நாடான அமெரிக்கா, இதுவரை அந்த ஒப்பந்தத்துக்கான நாடாளுமன்ற அனுமதியைப் பெற்று அமல்படுத்தவில்லை.
 
எனவே, அமல்படுத்தப்படாத ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக டிரம்ப் அறிவித்துள்ளது, சர்வதேச அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.