யூடியூப்பில் பப்ஜி விளையாட்டை மிகுந்த ஆபாசமான வர்ணனையுடன் நேரலை செய்தது, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைதாகி புழல் சிறையில் உள்ள பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை யூடியூப் சேனலைத் தொடங்கி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் சேலத்தைச் சேர்ந்த யூடியூபர் மதன்குமார். ஒருகட்டத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார்.

யூடியூபில் ஆபாசமாகப் பேசுவது, பெண்களை இழிவாகப் பேசுவது, திட்டுவது, சிறுவர் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாகவும் பப்ஜி மதன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் மதனுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.

இதனையடுத்து மதனின் யூடியூப் சேனல் மீது, சைபர் கிரைம் பிரிவு காவல்துறையில் புகார்கள் குவிந்தன. மேலும், மாநிலக் குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப் பிரிவிலும் புகார்கள் கொடுக்கப்பட்டன.

அந்த புகாரின் அடிப்படையில் யூடியூபர் பப்ஜி மதன் கடந்த மாதம் 18 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். யூடியூப் சேனலில் வீடியோக்களை வெளியிட்டு கோடிக்கணக்கில் மதன் பணம் சம்பாதித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.

சிறையில் அடைக்கப்பட்ட பப்ஜி மதன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் பரிந்துரை செய்தனர்.

இதனை ஏற்று கமி‌ஷனர் சங்கர் ஜிவால், பப்ஜி மதனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனால் ஓராண்டுக்கு சிறையிலிருந்து வெளியே வர முடியாது. ஜாமீனும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

[su_image_carousel source=”media: 24926,24927″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

யூடியூப் சேனலின் இயக்குநராக இருந்ததாக அவரது மனைவி கிருத்திகாவும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை சந்தித்து தங்கள் மீது பொய்யாக குற்றச்சாட்டுகள் புனையப்படுவதாக புகார் அளித்துள்ளார் பப்ஜி மதன்குமாரின் மனைவி கிருத்திகா.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா, மதன் கடந்த 3 ஆண்டுகளாக தினந்தோறும் 20 மணி நேரம் யூடியூப் சேனலில் உழைத்தார். இதுவரை எங்களுக்கு சொந்த வீடு கூட இல்லை. நாங்கள் இருப்பது வாடகை வீடு.

எங்களிடம் ஏதோ சொகுசு கார் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ஆடி கார் மட்டும் தான் இருக்கிறது. சொகுசு கார்கள் ஏதும் இல்லை. யூடியூப் சேனலை காவல்துறையினர் முடக்கியதால் எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டது.

எங்களுக்கு முழு வருமானம் இதிலிருந்து தான் கிடைக்கிறது. தற்போது அதை முடக்கிவிட்டனர். எனக்கும் மதனின் யூடியூப் சேனல் நிர்வாகத்திற்கு தொடர்பே இல்லை. அவரது நிர்வாகத்தில் நான் ஈடுபட்டதில்லை. என் வங்கிக் கணக்கை மட்டுமே மதன் பயன்படுத்தி வருகிறார்.

ஆபாசமாக பேசினார் என புகார் சொல்கிறீர்கள். அந்த வீடியோவுக்கு சென்று பாருங்கள், அதில் புகார் கொடுத்த 4 பேர் என் கணவரை ஆபாசமாக பேச தூண்டிவிட்டு, திட்டமிட்டு சதி செய்துள்ளனர். இதனால் தான் என் கணவர் ஆபாசமாக பேசினார். எனவே 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

சிறுவர் சிறுமிகளிடம் இழிவாகப் பேசி, பாலியல் அத்துமீறல்; தலைமறைவான பப்ஜி மதன் கைது