வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நவம்பர் 23ஆம் தேதி முதல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதன் காரணமாக நவம்பர் 23 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வானிலை கணிப்புக்கு 48 மணிநேரத்துக்கு முன்னதாகவே சென்னையிலிருந்து 1200 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.
இது அடுத்த 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்த மண்டலமாக மாறி, மத்திய மேற்கு பகுதியை நோக்கி நகரும். தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று (நவம்பர் 22) சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும்.
நவம்பர் 23 ஆம் தேதி நாகை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 24ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.
சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நவம்பர் 23 ஆம் தேதி முதல் வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசக்கூடும். அரபிக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரலாற்றிலேயே முதல் முறையாக திருச்செந்தூரில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற சூரசம்ஹாரம்