மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையில் ரூ.17 கோடியே 36 லட்சம் மோசடி செய்த புகாரில், 52 கல்லூரி முதல்வர்கள் நாளை (21.12.2021) நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

கடந்த 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பழங்குடியின மற்றும் பட்டியலின மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கல்வி உதவித் தொகையில் 17 கோடியே 36 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக தணிக்கை துறையினர் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து முதல் கட்ட விசாரணை நடத்தினர். அதில், நிர்வாக ஒதுக்கீட்டில் (Management Quota) சேர்ந்த மாணவர்களுக்கான உதவித்தொகையில் 4 கோடி ரூபாயும், பெரம்பலூரில் இல்லாத கல்லூரிக்கு 58 லட்சம் ரூபாய் உதவித்தொகை பெற்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரே மாணவருக்கு ஒரே ஆண்டில் பலமுறை கல்வி உதவித்தொகை பெயரில் ரூ.13 லட்சம், கல்வி உதவி தொகையை கல்லூரி பயன்பாட்டுக்காக பயன்படுத்தி ரூ.24 லட்சம் முறைகேடு, ஒரே மாணவனுக்கு வெவ்வேறு அடையாள அட்டையை அடிப்படையாக வைத்துப் பலமுறை எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான உதவித் தொகை பெற்றது, வேறு மாநில மாணவர்களுக்கு, மாணவர் அல்லாத நபருக்கு என வெவ்வேறு முறையில் ரூ.17 கோடியே 36 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த முறைகேட்டில் பல பாலிடெக்னிக் கல்லூரி, பயிற்சி கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி என 52 கல்லூரிகளுக்கும், நிர்வாக அலுவலர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கான கல்வித் உதவித் தொகையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குறிப்பிட்ட 52 கல்லூரிகளைச் சேர்ந்த முதல்வர்கள் நாளை நேரில் விசாரணைக்கு லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.