கோவையில் குளத்தை ஆய்வு செய்யச்சென்ற அதிமுக முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏவுமான பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே அமைந்துள்ள ருநல்லிபாளையம் ஊராட்சியில் கோதவாடி குளம் 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் அரசு மற்றும் பல்வேறு தன்னார்வலர்களின் முயற்சி காரணமாக குளம் தூர்வாரப்பட்டது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன கால்வாயில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் 30 ஆண்டுகளுக்கு பிறகு குளம் முழுமையாக நிரம்பியது.
குளம் நிரம்பியதை கொண்டாடும் வகையில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் குளக்கரையில் உள்ள கோவிலில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். இதற்கிடைடியே கிணத்துக்கடவு அதிமுக சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிமுக முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏவுமான பொள்ளாச்சி ஜெயராமன், நிரம்பிய தண்ணீரைப் பார்வையிட்டு மலர் தூவி வழிபாடு செய்தார். அப்போது அதிமுக தரப்பினர் நாங்கள் தான் குளம் நிறைய காரணம் என கோஷங்களை எழுப்பினர்.
இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக குளத்தை கவனிக்காத சட்டமன்ற உறுப்பினர் இப்போது எதற்காக வந்தார் என ஜெயராமனுக்கு எதிராகவும் குளத்தை விட்டு வெளியேறச் சொல்லியும் கோஷங்களை எழுப்பி, அவரது வாகனத்தையும் முற்றுகையிட்டனர்.
பின்னர் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியதால், அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் அதிமுகவினர் பொள்ளாச்சி ஜெயராமனைப் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் பொள்ளாச்சி ஜெயராமனை நோக்கிச் செருப்பை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் நடந்ததை அடுத்து அங்கு சென்ற திமுக மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன் கூறும்போது, கடந்த 30 ஆண்டுகளாக நிரம்பாத குளத்தை திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைப் பொறுத்துக் கொள்ளாத அதிமுகவினர் வேண்டுமென்றே பிரச்சனை செய்கின்றனர் என குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ மீது காலணி வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் அமைச்சரமான எஸ்.பி.வேலுமணி தலைமையில், அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மேற்கு மண்டல காவல்துறை ஐஜி சுதாகரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.