கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் நிபா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படவேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் பக்ரீத் மற்றும் ஓணம் பண்டிகைகளுக்குப் பின்னர், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அங்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் கேரளாவில் தற்போது நிபா வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கோழிக்கோடு அருகே 12 வயது சிறுவன் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் நேற்றிரவு (செப்டம்பர் 04) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

நிபா வைரஸ் சோதனை முடிவுகள் இன்று (செப்டம்பர் 05) காலை கிடைப்பதற்குள் அச்சிறுவனின் உடல்நிலை மோசமாகி, அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் குழு ஒன்று கேரளா மாநிலத்திற்கு விரைந்துள்ளது.

இதனையடுத்து அந்த சிறுவனுடன் கடந்த பத்து நாட்களாகத் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தும் பணியில் கேரள சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் பாதிப்பு பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், தமிழ்நாடு எல்லைப்பகுதிகளில் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு வருவதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எல்லைப்பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் பாதிப்புகள் குறித்துக் கண்காணித்து வருகிறோம்.

ஏற்கனவே கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டபோது அதை அந்த மாநில அரசு சிறப்பாக கட்டுப்படுத்தியது. தற்போதும் கேரளாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் பரவி உள்ள நிபா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

[su_image_carousel source=”media: 26230,26229″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

நிபா வைரஸ் பாதிப்பு :
முதலில் கடந்த 2001இல் மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பழம் திண்ணி வௌவால்கள் மூலமே நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2018இல் 18 பேருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டதில், 17 பேர் உயிரிழந்தனர்.

நிபா வைரசால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து இது மனிதர்களுக்குப் பரவும். அதேபோல வௌவால்களால் பாதி சாப்பிட்ட பழங்களை மனிதர்கள் சாப்பிடும்போதும், நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது.

நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நபருடன் தொடர்பில் இருக்கும் மற்றவர்களுக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இப்படி ஒரு மனிதரிடம் இருந்து மற்றவர்களுக்கு நிபா வைரஸ் பரவுவது கணிசமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுவாக நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட ஒருவருக்கு 5 முதல் 14 நாட்களில் அறிகுறிகள் தென்படத் தொடங்கி தீவிரமாகும். காய்ச்சல், தலைவலி, மயக்கம் மற்றும் குமட்டல் ஆகியவை முக்கிய அறிகுறிகள். சிலருக்கு மூச்சுத் திணறல், வயிற்று வலி, வாந்தி, சோர்வு மற்றும் பார்வை மங்குவது ஆகிவையும் ஏற்படும். சில சமயங்களில் நோயாளிகள் கோமாவுக்கு செல்லவும், மூளைக்காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

நிபா வைரசுக்கு இதுவரை தடுப்பூசிகள் கண்டறியப்படவில்லை. கைகளைக் கழுவுவது, மாஸ்க் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் நிபா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம். நிபா வைரஸ் மிக வேகமாகப் பரவாது என்பதால் வேக்சின்களுக்கு பதிலாக இதுபோன்ற நடவடிக்கைகள் மூலமே அதை எளிதாகக் கட்டுப்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

‘தீவிரவாத எதிர்ப்பு’ படிப்புக்கு அனுமதி; சர்ச்சையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்