போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத்தை விதிக்க எஸ்.எஸ்.ஐ அதிகாரிகளுக்கு நிகரான பதவியில் இருப்பவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சாலை விதிகளை மீறுவோர் மீது அபராதத்தையும், தண்டனையையும் உயர்த்தி மத்திய அரசு புதிய சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவந்துள்ளது.

தமிழகத்தில் திருத்தப்படுத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச் சட்டம் செப்டம்பர்- 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தை போக்குவரத்து துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடு மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதன்படி சரியான ஆவணம் இன்றி பயணிப்பது, குடி போதையில் வாகனத்தை இயக்குவது, ஓட்டுநர் உரிமம் இன்றி வண்டியை ஓட்டுவது, தலைக்கவசம் அணியாமல் இருப்பது போன்ற குற்ற நடவடிக்கைகளுக்கு அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது சரியான ஆதாரத்துடன் எஸ்.எஸ்.ஐ மற்றும் அதற்கு நிகரான பதவியில் இருக்கும் அதிகாரிகள் மட்டுமே வசூலிக்க வேண்டும். எஸ்.எஸ்.ஐ பதவிக்கு கீழ் உள்ளவர்களுக்கு அபராதத்தை வசூலிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய மோட்டார் வாகனத்திருத்த சட்டத்தின் படி அதிகரிக்கப்பட்ட அபராதத்தொகை விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய மோட்டார் வாகனச் சட்டம் மக்களிடையே கடும் அதிருப்தியையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மக்கள் சில கேள்விகளை முன்வைக்கின்றனர். அதில், “சாலையில் விதிமீறல்களை கடுமையாக அமல்படுத்தும் அதேநேரம் விதிமீறலுக்கான சூழல்களையும் இல்லாமல் செய்ய வேண்டியது அரசின் கடமை. தரமான சாலைகள்.. சாலைகளில் தோண்டுவோரே அதை புதுப்பித்து தரவேண்டும். சாலையை கண்காணிக்க குழு, சாலை சரியாக இல்லை என்றால் சாலை போட்டவருக்கே அபராதம் போன்றவற்றையும் அரசு செய்ய வேண்டும்.

எத்தனை சாலைகளில் பிளாட்பாரங்களை ஆக்கிரமித்துள்ளனர். நடக்கமுடியாத அளவுக்கு.. அவர்கள் மீது ஏன் நடவடிக்கை பாய்வதில்லை. பல இடங்களில் பிளாட்பாரமே இல்லாமல் சாலைகள் உள்ளன. அதற்கு என்ன தீர்வு.

இதேபோல் மதுவால் தான் விபத்துக்கள் பலவற்றுக்கு காரணம். எனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்க மதுக்கூடங்கள் அருகே நான்கு பக்கமும் சாலைகளில் தினமும் கடுமையாக சோதிக்கலாம், என பல்வேறு கருத்துகளைக் கூறிவருகின்றனர்.