பொதுமுடக்கம் அமலில், வரும் 11.5.2020 (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் அனைத்து வகை தனியார் நிறுவனங்கள் மற்றும் டீக்கடைகள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மே 17ஆம் தேதி வரை மூன்றாவது கட்ட ஊரடங்கு உத்தரவு நாடு முழுக்க அமலில் உள்ளது. இருப்பினும் மதுபான கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதன் அடிப்படையில் மே 4ம் தேதி முதல் பெருநகர சென்னை காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வழிமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மற்றொரு விதிமுறை தளர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க: மதுக்கடைகள் மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறதா தமிழக அரசு.?

அதில், பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அனைத்து தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 வரையும், தமிழத்தின் பிற பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரையும் செயல்படும்.

பெட்ரோல் பங்க்குகள், பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையும், மற்ற அனைத்து பகுதிகளிலும், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் செயல்படும். தேசிய, மாநில நெடுஞ்சாலையிலுள்ள பெட்ரோல் பங்க்குகள் 24மணி நேரமும் செயல்படும்.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை டீக்கடைகளை திறந்து வைக்கலாம். ஆனால் பார்சல்களை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். தினமும் 5 முறை கிருமிநாசினி தெளித்து, கடையை சுத்தமாகவும் சுகாதரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க தவறும் தேனீர் கடைகள் உடனடியாக மூடப்படும்.

காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிற தனிக்கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் காலை 10:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை செயல்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.