பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் 3வது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி காவல்துறையால் நேற்று (ஆகஸ்ட் 2) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா (வயது 72). சிவசங்கர் பாபா மீது இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் பலர் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.

சிவசங்கர் பாபா தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 15 ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட மாணவிகளை சிவசங்கர் பாபா சீரழித்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் பள்ளி மாணவிகள் பொது தேர்வுக்கு முன்பும், பிற ஆன்மிக நிகழ்வு நாட்களிலும் சிவசங்கர் பாபாவிடம் ஆசிர்வாதம் பெற்றால் நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என்று பள்ளியின் ஆசிரியைகள் கூறி அழைத்து செல்வார்கள்.

அப்போது மாணவிகளை சிவசங்கர் பாபா ஆசிர்வாதம் என்ற பெயரில் தனிதனியாக தனது அந்தரங்க அறைக்கு அழைத்து சென்று, அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அறையில் வெளிநாட்டு மதுபானங்கள், சாக்லெட்டுகளை கொடுத்து பாலியல் தொந்தரவு செய்து வந்ததும் விசாரணையில் வெளிவந்தது.

இதனையடுத்து பள்ளி மாணவிகள் கொடுத்த புகார்களின் பேரில் தனித்தனியாக 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபா ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது 3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து சிவசங்கர் பாபாவை நேற்று செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை சிவசங்கர் பாபாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஏடிஎம் கட்டணம் உயர்வு!