ஒன்றிய அரசு கொண்டுவந்த ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு 2021 மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

ஒன்றிய பாஜக அரசு ஒளிப்பதிவு சட்டத் திருத்த வரைவு 2021 மசோதாவை கடந்த ஜூன் 18 ஆம் தேதி வெளியிட்டது. மத்திய அரசின் இந்த மசோதாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.

தமிழ் திரையுலகை பொறுத்தவரை நடிகர் சூர்யா முதன் முதலில் இந்த மசோதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். அரசின் சட்டம் என்பது மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்; மக்களின் குரல்வளையை நெறிக்க கூடாது என்று நேரடியாக குற்றம் சாட்டியிருந்தார் சூர்யா. அதன்பின்னர் திரை கலைஞர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனையடுத்து நடிகர் கார்த்தி, நடிகை ரோஹினி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி உள்ளிட்டோர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021க்கு எதிராக முறையிட்டனர்.

திரைத்துறையின் கருத்துச் சுதந்திரத்தை மட்டுமல்ல, அதை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க, மாநில அரசு இதில் தலையிட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு 2021 மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில், “கருத்து சுதந்திரத்தை பறிக்கும் ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதா, மாநில அரசுகளின் அதிகாரங்களையும் குறைக்கிறது.

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக இந்த சட்ட மசோதா இருக்கிறது. உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள், ஒன்றிய திரைப்பட சான்றிதழ் வாரிய அதிகாரத்தையும் குறைக்கிறது. வயது வாரியாக சென்சார் சான்று வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

 

நடிகர் சூர்யாவை பகிரங்கமாக மிரட்டி பாஜக தீர்மானம்!