மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தேடப்பட்டுவந்த சாமியார் சிவசங்கர் பாபா டெல்லியில் சிபிசிஐடி காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கும் மாணவிகள், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகாரில் அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதன்பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே சிவசங்கர் பாபா நெஞ்சுவலி காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக கூறப்பட்டது.
இதனையடுத்து சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி டிஎஎஸ்பி குணவர்மன் தலைமையில் தனிப்படை காவல்துறை டேராடூன் சென்றது. ஆனால் காவல்துறை வருவதை எதிர்பார்த்த சிவசங்கர் பாபா, அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிபிசிஐடி காவல்துறை, சிவசங்கர் பாபாவை தேடிச் சென்று உத்திரபிரதேசம் – டெல்லி எல்லையில் உள்ள காசியாபித்தில் அவரையும், அவரது உதவியாளர்களையும் கைது செய்துள்ளனர்.
[su_image_carousel source=”media: 24492,24490″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]
சிபிசிஐடியிடம் பிடிபட்ட சிவசங்கர் பாபா, தலைநகர் டெல்லியில் உள்ள மாவட்ட சாகெட் நீதிமன்ற நீதிபதி விபுல் சத்ருவார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அதனையடுத்து சிவசங்கர் பாபாவை தமிழ்நாட்டுக்கு அழைத்து வர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சனிக்கிழமை அன்று தமிழ்நாட்டில் உள்ள செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தலைநகர் டெல்லியில் இருந்து தனியார் விமானம் மூலம் சிவசங்கர் பாபா சென்னை அழைத்துவரப்படவிருக்கிறார்.
இந்நிலையில் சுஷில் ஹரி பள்ளியில் நடந்த பாலியல் தொல்லைகளுக்கு சில ஆசிரியைகளும் உடந்தை என கூறப்படுகிறது. இதனையடுத்து அந்தப் பள்ளியில் சிவசங்கர் பாபாவின் அறைகள், நடன அரங்கங்களில் சிபிசிஐடி காவல்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதனிடையே சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறும், இந்த பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் மாணவர்கள் சேர பள்ளிக் கல்வித் துறை தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,
மேலும் இந்த பள்ளியை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும் என மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சிவசங்கர் பாபா மீது பாய்ந்தது போக்சோ சட்டம்