மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக பிரபலமான பள்ளிகளின் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. முதலில் சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த புகார்கள், பின்னர் தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் சென்று, விசாரணை நடைபெறுகிறது.

முன்னதாக சென்னையில் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி மாணவிகள் கொடுத்த பாலியல் தொல்லை புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதனைத்தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்தும் வெளிவரும் பாலியல் புகார்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் தற்போது சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியும் பாலியல் தொல்லை சர்ச்சையில் சிக்கி உள்ளது. தன்னை கடவுளின் அவதாரம் என கூறிக்கொண்டு ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வரும் சாமியார் சிவசங்கர் பாபா மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் கூறப்பட்டுள்ளது.

சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைத்தளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சாமியார் சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.

இந்த விசாரணைக்கு சுஷில் ஹரி பள்ளி நிர்வாகிகள் நாகராஜன், வெங்கட்ராமன் உட்பட 3 பேர் நேரில் ஆஜராகினர். ஆனால், சிவசங்கர் பாபா உட்பட 3 பேர் ஆஜராகவில்லை. சிவசங்கர் பாபா நெஞ்சுவலி ஏற்பட்டு உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக வழக்கறிஞர் ஜானகி என்பவர் ஆஜராகினார்.

இந்நிலையில், மூன்று மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்!