பாடப் புத்தகங்களில் தமிழறிஞர்களின் பெயருக்கு பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டது, அதிமுக ஆட்சி காலத்தில் எஸ்சிஇஆர்டிக்குப் பரிந்துரை செய்து எடுக்கப்பட்ட முடிவு என்று தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்களை அச்சிடுகிறது. சமீபத்தில் இதன் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டார்.
அவரது நியமனத்திற்கு எதிர்க்கட்சிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் அரசு தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. லியோனி தலைவராகப் பொறுப்பேற்றது முதல் அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார். ஆட்சிக்கு வந்தவுடன் திமுக அரசு மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்தது.
இந்தச் சொல்லாடல் கடும் விமர்சனங்களை எழுப்பியது. ஆனால் அந்த வார்த்தையைப் பாடப்புத்தக்கங்களில் மாற்றுவோம் என லியோனி அதிரடியாக அறிவித்தார். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்புகளின் பாடப்புத்தகங்களும் தமிழில் அச்சிட்டு வெளியிடப்படும் என்றும் கூறினார்.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் தமிழறிஞர்களின் பெயரில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு புத்தகங்கள் அச்சிடப்பட்டிருக்கிறது. மயூரம் வேதநாயகம் பிள்ளை என்பது வேதநாயகம் எனவும், உ.வே சாமிநாத அய்யர் என்பது உ.வே சாமிநாதர் எனவும் மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்பது ராமலிங்கம் எனவும், மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பது மீனாட்சி சுந்தரனார் எனவும் மாற்றப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களிலும் புத்தகங்களில் சாதி பெயர்கள் நீக்கப்பட்டே புத்தகங்கள் அச்சிடப்படும் எனவும் பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே திமுக ஆட்சிக் காலத்தில் பாடநூல்களில் தமிழ் அறிஞர்களின் சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டதாக அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் பலரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி விளக்கம் அளித்துள்ளார்.
அதில், தமிழ் அறிஞர்களின் பெயர்களில் சாதி நீக்கப்பட்ட செய்தியை அறிந்து, ஒவ்வொரு பாடநூலாக நான் ஆய்வு செய்து பார்த்தேன். அதில் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் சாதிப் பெயர் நீக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் மற்றும் பாடநூல் கழகத்தின் தலைவராக வளர்மதி இருந்த காலகட்டத்தில் எஸ்சிஇஆர்டிக்குப் பரிந்துரை செய்யப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதனால் இது புதிய செய்தி அல்ல. மேலும் இது திமுக ஆட்சிக் காலத்தில் கடந்த ஒரு மாத காலத்துக்குள் நடந்தது போலத் தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகள் உண்மை அல்ல. இந்த மாறுதல் தொடருமா அல்லது தலைவர்களின் பெயர்களுடன் சாதிப் பெயர் மீண்டும் சேர்க்கப்படுமா என்பதைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், முதல்வரும் முடிவெடுப்பர். இதுகுறித்துக் கல்வியாளர்களைச் சந்தித்து ஆலோசித்து, எஸ்சிஇஆர்டிக்குப் பரிந்துரை செய்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவுக்கே முன்னோடியாக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்