41 ஆண்டுகளுக்கு பிறகு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று வரலாறு படைத்துள்ள இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெல்ஜியமுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா தோற்றிருந்தது. இதனால் ஆண்களுக்கான ஆண்கள் ஹாக்கி போட்டியில் ஜெர்மனிக்கு எதிரான வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா ஆட வேண்டிய சூழல் உருவானது.

ஆகஸ்ட் 05 காலை நடைபெற்ற போட்டியில் இந்திய ஹாக்கி அணி ஜெர்மனியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்திலேயே ஜெர்மனி வீரர் டிமுர் ஒரு கோல் அடித்தார். இதனால் ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் முதல் கால் பகுதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

2வது கால் பகுதி ஆட்டத்தில் ஜெர்மனிக்கு இந்திய அணி பதிலடி கொடுத்தது. ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்தில் அதாவது 17வது நிமிடத்தில் சிம்ரஞ்ஜீத் சிங் அபாரமாக கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என முன்னிலைப் பெற்றது.

ஜெர்மனி வீரர் ஃபர்க் 25வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக ஹர்திக் சிங் மற்றும் ஹர்மன்ப்ரீத் சிங் முறையே 27 மற்றும் 29வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினர். இதனால் 2வது கால் பகுதி ஆட்டம் முடிவில் ஸ்கோர் 3-3 என சமநிலை பெற்றது.

3வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீரர்களின் ஆட்டம் அபாரமாக இருந்தது. இதனால் 3வது கால் பகுதி ஆட்டத்தில் இந்தியா 5-3 என முன்னிலைப் பெற்றிருந்தது. 4வது மற்றும் கடைசி கால் பகுதி ஆட்டம் தொடங்கியது. 48வது நிமிடத்தில் ஜெர்மனியின் வண்ட்பெடர் கோல் அடிக்க இந்தியாவின் ஸ்கோர் 5-4 என ஆனது.

கடைசி ஒன்றரை நிமிட ஆட்டத்தில் அனல் பறந்தது. ஜெர்மனி வீரர்கள் கோல் அடிக்க முயற்சி செய்ய, இந்திய வீரர்கள் ஜெர்மனியை கோல் அடிக்க விடாமல் சிறப்பாக தடுத்தனர். 7 வினாடிகள் இருக்கும்போது ஜெர்மனிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதையும் இந்திய வீரர்கள் முறியடிக்க 5-4 என இந்தியா வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.

ஒலிம்பிக்கில் கடைசியாக 1980 ஆம் ஆண்டு இந்தியா பதக்கம் வென்றிருந்தது. கிட்டத்தட்ட 41 ஆண்டுகளுக்கு பிறகு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று வரலாறு படைத்திருக்கிறது இந்திய அணி. வரலாற்று சாதனைப் படைத்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் வெண்கல வென்ற இந்திய ஹாக்கி அணியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கேப்டன் மன்பிரீத்சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால்சிங், ஹர்திக்சிங், ‌ஷம்ஷெர்சிங், தில்பிரீத்சிங், குர்ஜந்த்சிங், மன்தீப்சிங் ஆகிய 8 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

குழந்தைகளை அடிமையாக்கும் ஃப்ரீ ஃபயர் கேம்: தடைகோரி பிரதமருக்கு டெல்லி நீதிபதி கடிதம்