பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் ஆகியவை இணைந்து சென்னை பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் ஆகியவை இணைந்து ”சென்னை பள்ளிகளில் முழுமையான மாற்றம்” என்ற அடிப்படையில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு, கற்பித்தல் முறை, ஆசிரியர்களின் பயிற்சி, விளையாட்டு மற்றும் இதர வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை பள்ளிகளில் உள்ள 10 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளில் ஸ்மார்ட் போர்டு, ஆசிரியர்களுக்கு மடிக்கணினி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய மேசைகள்,
ஒரு ஆண்டுக்கு இணையதள வசதி, வண்ணமயமான ஓவியத்துடன் கூடிய வகுப்பறைகள் ஆகியவற்றை அமைத்திட ரூ.56 லட்சத்து 60 ஆயிரத்து 100 மதிப்பீட்டில் மற்றும் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியில் ரூ.28 லட்சத்து 87 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளை மேம்படுத்த விரும்பும் பெருநிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வட்டார துணை ஆணையர்கள் மற்றும் மண்டல அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.