மேகாலயா, மகாராஷ்டிரா மாநிலங்களைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று 4.3 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இரு நாடுகளையும் உருக்குலைத்துள்ளது. துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,000-த்தை தாண்டி உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவுக்கு சர்வதேசத்தின் உதவிக் கரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

துருக்கி, சிரியாவை தொடர்ந்து உலகின் பல நாடுகளை நிலநடுக்க அதிர்வுகள் அச்சுறுத்தி வருகின்றன. ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் இந்தியாவில் தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்பட்டு வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் மேகாலயா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. மேகாலயா மாநிலத்தின் துரா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.0 ஆகவும் மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் அதிரவைத்த நிலநடுக்கமானது 3.6 அலகுகளாகவும் பதிவாகின.

மேகாலயா மாநிலத்தில் நாளை சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் இந்த நிலநடுக்கம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னரும் மேகாலயா மாநிலத்தில் நில நடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன. மேகாலயா மாநிலமானது வங்கதேச எல்லையில் அமைந்துள்ளது. இதனால் வங்கதேச எல்லைப் பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேகாலயா, மகாராஷ்டிராவை தொடர்ந்து குஜராத் மாநிலம் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ராஜ்கோட்டிற்கு வடமேற்கே 270 கி.மீ தூரத்திலும், 10 கி.மீ ஆழத்திலும் இன்று மதியம் 3.30 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனை தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லேசான நில அதிர்வு என்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 3.4 மற்றும் 3.1 ரிக்டர் அளவிலான இரண்டு சிறிய நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் அப்பகுதியில் இதுபோன்ற நிலநடுக்கங்களின் எண்ணிக்கையை மூன்றாவது முறை ஏற்பட்டுள்ளது. குஜராத்தின் கட்ச் பிராந்தியம் மிகப் பெரிய நிலநடுக்கப் பேரழிவை 2001-ல் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.