ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் வகையில், 38,800 பெண்களுக்கு தலா 5 ஆடுகள் இலவசமாக வழங்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சமுதாயத்தில் ஆதாரவற்ற நிலையில் வாழும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளை, திட்டங்களை அறிவித்து அமல்படுத்தி வருகிறது. சமூக நலத்துறைச் சார்பில் வெவ்வேறு வகைகளில் பெண்கள், குழந்தைகள், தொழில் முனைவோர், சிறுபான்மை இன பெண்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என பல்வேறு திட்டங்கள் உள்ளன.

தமிழ்நாடு அரசின் சமூக நலத்திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கான பல்வேறு திட்டங்கள் ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர ஆதரவற்றோர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டம், ஏழைப்பெண்கள் படிப்புக்கு உதவி, பட்ட மேற்படிப்புக்கு உதவி, பெண்கள் திருமண உதவித்திட்டம் உள்ளிட்டவைகளும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற 38,800 பெண்களுக்கு, ரூ.75.63 கோடி நிதி ஒதுக்கீட்டில் பயனாளி ஒருவருக்கு தலா 5 செம்மறியாடுகள் அல்லது வெள்ளாடுகள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

அதனை செயல்படுத்தும் விதமாக பெண்கள், ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்கள் வாழ்வில் முன்னேற இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகுதியுள்ள பெண்களை தேர்வு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஆதரவற்ற 38,800 ஆதரவற்ற பெண்களுக்கு தலா ஐந்து ஆடுகள் என ஒரு லட்சத்து 94 ஆயிரம் ஆடுகள் வாங்க ரூ.75 கோடியே 63 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதோடு, பயனாளிகளில் குறைந்தது 30 சதவீதம் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும், நிலங்கள் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, ஆதரவற்ற பெண்கள் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

குறிப்பாக ஏற்கனவே ஆடுகள், மாடுகள் வைத்திருக்க கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த பயனாளர்களை தேர்ந்தெடுக்கவும், அதனை முறைப்படி வழங்குவதை கண்காணிக்கவும் கால்நடைத்துறையின் துணை இயக்குனர் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.