தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று 20 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் மின்னல் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ள நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு இன்று 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்த ஒருவர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 24 பேர் உட்பட மொத்தம் 20,911 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனா கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,68,500 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 27,27,960 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவால் மேலும் 19 பேர் உயிரிழந்தனர். தற்போது தமிழ்நாட்டில் 88,959 பேர் கொரோனா நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு மற்றும் கோவை மாவட்டங்களில் தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னையில் தான் நிலைமை மிக மோசமாக உள்ளது. ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் கிட்டதட்ட 40%க்கு மேல், அதாவது 8218 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை உறுதி செய்யப்பட்ட தினசரி கொரோனா பாதிப்புகளில் இதுதான் அதிகம்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர லாக்டவுன், ஞாயிறு முழு லாக்டவுன் மட்டும் தற்போது அமலில் உள்ளது. மற்றபடி பெரும்பாலான சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் பதிவாகும் கேஸ்களில் பெரும்பாலான கேஸ்கள் ஒமைக்ரான் கேஸ்கள் ஆகும். இதனால் தமிழ்நாட்டில் லாக்டவுன் விதிகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் தற்போது பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்லும் பொதுமக்களுக்கு அபராதத் தொகையினை ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முகக்கவசம் அணிபவர்கள் வாய் மற்றும் மூக்கை நன்கு மூடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். கொரோனாவை தடுக்க பொது மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வெளியே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் ஏற்கனவே ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.