ஆல்ஹலால் கலந்த சானிடைசர் தயாரிக்க அரிசியை ஏற்றுமதி செய்யும் மத்திய அரசின் முடிவை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள சானிடைசர் அதிகமாகத் உபயோகப்படுத்தப்படுகிறது. அந்தத் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு அரிசியின் மூலம் சானிடைசரைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டது. அரிசியல் உள்ள எத்தனால் கைகளை சுத்தம் செய்யும் சானிட்டைசர் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இதேபோன்று பெட்ரோல் பயன்படுத்தவால் ஏற்படும் புகையை குறைக்க அதனுடன் எத்தனால் கலக்கப்படும் என அரசு கூறியிருந்தது.

இதற்காக நேற்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் கூடிய தேசிய எரிபொருள் ஒத்துழைப்பு கமிட்டி, இந்திய உணவுக் கழகத்திலிருந்து அபரிமிதமாக, உபரியாக இருக்கும் அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து எத்தனால் தயாரிக்க பயன்படுத்தலாம் என முடிவு எடுத்துள்ளது. தேசிய உயிரி எரிபொருள் கொள்கையை காரணம் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதேசமயம், பல்வேறு மாநிலங்களின் எல்லைகளில் புலம் பெயர் தொழிலாளர்கள் உணவு இன்றி, அரிசியின்றி மிகவும் துன்பப்படுகிறார்கள். நாட்டில் லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள், கீழ்நடுத்தரக் குடும்பத்தினர் அரிசி கிடைக்காமல் மிகுந்த சிரமப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது பதிவில், ‘எப்போது இந்தியாவின் ஏழை மக்கள் விழித்துக் கொள்வார்கள்? ஏழைகள் பசியால் உயிரை விட்டுக் கொண்டிருக்க அவர்களுக்கான அரிசியில் இருந்து தயாரிக்கப்பட்ட சானிட்டைசரால் பணக்காரர்கள் சிலர் கைகளை கழுவிக் கொண்டிருக்கின்றனர்’ என்று கூறியுள்ளார்.

முன்னதாக கொரோனா தொற்றை தடுக்க பயன்படுத்தப்படுகிற சானிடைசர், சோப்புகள், முக கவசங்கள், கையுறைகள் ஆகியவற்றுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பது தவறானது. எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்களுக்கும் ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.