பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்கள், வேலையில்லாத இளைஞர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோரை பாஜக புறக்கணித்து வருவதாகக் கூறி, உத்தரப் பிரதேச அமைச்சர் தரம் சிங் சைனி பதவி விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாஜக யோகி ஆதித்யநாத் அரசில் இருந்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் அடுத்தடுத்து விலகி வருவது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக கட்சியின் மூத்த தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகி, பின்னர் அகிலேஷ் யாதவை நேரில் சந்தித்து சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். மேலும் பலர் பாஜக கட்சியிலிருந்து விலக உள்ளதாகவும் கூறியிருந்தார்.

அதேபோல் சுவாமி பிரசாத் மவுரியா கட்சியிலிருந்து விலகிய சில மணி நேரத்திலேயே ரோஷன் லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி மற்றும் பகவதி சாஹர் வினய் சாக்யா ஆகிய சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.

இதனையடுத்து நேற்று (12.1.2022) யோகி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தாரா சிங் சவுகான் அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். மேலும் ஏற்கனவே 6 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகிய நிலையில் இன்று மற்றொரு சட்டமன்ற உறுப்பினரும் விலகினார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் முகேஷ் வர்மா இன்று கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில் தற்போது உத்தரப் பிரதேச அமைச்சர் தரம் சிங் சைனி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர், ஆயுஷ், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் ஆகிய துறைகளின் (தனிப் பொறுப்பு) அமைச்சராக இருந்தார்.

இதுகுறித்து தரம் சிங் சைனி கூறும்போது, பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்கள், வேலையில்லாத இளைஞர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோரை பாஜக புறக்கணித்து வருவதால் தாம் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில், கடந்த 2 நாட்களில் 3 அமைச்சர்கள் மற்றும் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி உள்ளது யோகி தலைமையிலான பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.