திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் காவல்துறையினர் முன்னிலையில் தள்ளுவண்டி வியாபாரியை கொடூரமாக தாக்கிய சம்பவத்தில், பாஜக இளைஞரணி நிர்வாகி ரமேஷ் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிரதமர் மோடி அண்மையில் பஞ்சாபில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது, மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மோடி பங்கேற்பதாக இருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, டெல்லி திரும்பினார்.

இதனையடுத்து பிரதமர் மோடியின் பாதுகாப்பில் பஞ்சாப் மாநில அரசு கவனம் செலுத்தவில்லை, அவர்களின் பாதுகாப்பு குறைபாடுகளே இதற்குக் காரணம் எனக் கூறி பல்வேறு இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி தமிழ்நாட்டில் கொங்கு மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் பாஜகவினர் போராட்டங்களை நடத்தினர். இதன் ஒருபகுதியாக, திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, திறக்கப்பட்டு இருந்த கடைகளை மூட சொல்லி வற்புறுத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

பாஜகவினர் போராட்டத்தின்போது, தள்ளுவண்டியில் பழங்கள் விற்பனை செய்து வரும் முத்துசாமி என்பவர், பிரதமர் மோடியை விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் முத்துச்சாமியை சரமாரியாகத் தாக்கினர். அவர் உயிருக்கு அஞ்சி அருகே இருந்த ஒரு கடைக்குள் சென்று பதுங்கிக் கொண்டார்.

ஆனாலும் சில பாஜக நிர்வாகிகள் காவல்துறையினரையும் மீறி கடைக்குள் சென்று தள்ளுவண்டி வியாபாரியை காவல்துறையினர் முன்னிலையில் கொடூரமாக தாக்கினர். இதில் அதே இடத்திலேயே அந்த வியாபாரி நிலைகுலைந்து விழுந்தார். பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையிலேயே பாஜகவினர் கொடூரமாக தாக்கியதை கண்டு அங்கிருந்த பெண்கள் அழுது ஓலமிட்டபடி அலறி ஓடினர்.

இதனையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட பாஜகவினரை தடுத்து, வியாபாரியை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் பல்லடம் அடுத்த அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த முத்துச்சாமி என்பதும், தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

தாம் மோடியை விமர்சிக்கவிலை என்றும் தள்ளுவண்டியை நகர்த்த முடியாமல் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்; அதனால் போராட்டம் முடிந்து விட்டதே நகருங்கள் என சொன்னதாகவும் அந்த ஆத்திரத்தில் தான் பாஜகவினர் தன்னை தாக்கியதாகவும் ள்ளுவண்டி வியாபாரி முத்துச்சாமி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜவினர் மீது கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பாஜக இளைஞரணி நிர்வாகி ரமேஷ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து தாராபுரம் சிறையில் அடைத்துள்ளனர்.