பஞ்சாபில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மிகப் பெரிய வெற்றி பெற்று, பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, 7 மாநகராட்சிகள், 109 நகராட்சி கவுன்சில்கள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 9,222 வேட்பாளர்கள் போட்டியிட்ட அந்த தேர்தலில், 71.39% வாக்குப்பதிவானது.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 17) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், சுயேட்சை வேட்பாளர்கள் 2,832 பேரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் 2,037 பேரும், ஷிரோமணி அகாலி தளத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் 1,569 பேரும், பாஜகவை சேர்ந்த வேட்பாளர்கள் 1,103 பேரும், வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த 53 ஆண்டுகளாக அகாலி தளம் கட்சிக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்த பதீண்டா மாநாகராட்சியை, முதல் முறையாக காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
இது தொடர்பாக பதீண்டா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், பஞ்சாப் நிதி அமைச்சருமான மன்ப்ரீத் சிங் பாதல், தன்னுடைய ட்விட்டர் பதிவில், “இன்று வரலாறு படைக்கப்பட்டுள்ளது. 533 ஆண்டுகளில் முதல் முறையாக பதீண்டா, காங்கிரஸ் மேயரைப் பெறப்போகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
இது காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிக்கும் நிலையில், கிராமங்களில் மிகப்பெரிய வாக்கு வங்கியை கொண்டுள்ள பாஜகவுக்கு இது மிகப்பெரிய பின்னடைவு என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அமிர்தசரஸில் மாநகராட்சியின் வார்டு எண் 37ல் அதிகாரபூர்வ வாக்கு எண்ணிக்கையின் படி, பாஜக வேட்பாளர் மனோகர் சிங் என்பவர், 52 வாக்குகள் பெற்றுள்ளார். இது இந்த தேர்தலில் பதிவான நோட்டா வாக்குகளின் எண்ணிக்கையான 60ஐ விட குறைவாகும்.
அமிர்தசரஸில் பாஜகவை விட நோட்டா வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள 40 வார்டுகளில் ஒரு வார்டில் கூட பாஜக வெற்றி பெறவில்லை.
முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தில் ஷிரோமணி அகாலி தளத்தின் கூட்டணியில் பாஜக இடம் பெற்றிருந்தது. ஆனால், பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து ஷிரோமணி அகாலி தளம் கட்சி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
பாஜக முன்னாள் அமைச்சர் மீது ‘MeToo’ புகார்; பத்திரிகையாளர் பிரியா ரமணி விடுவிப்பு