உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவை சேர்ந்த 94 வயதான பக்வானி தேவி தாகர், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்து நாட்டில் 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டி நடைபெற்று வருகிறது. பின்லாந்து உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இந்தாண்டு பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 1500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் பின்லாந்தில் நடைபெற்றுவரும் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவை சேர்ந்த 94 வயதான பக்வானி தேவி தாகர், தங்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

இவர் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் பங்கேற்று, பந்தயத் தூரத்தை 24.74 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மேலும் குண்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். மேலும் இவர் ஈட்டி எறிதல் போட்டியிலும் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

பக்வானி தேவி இதற்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார்.

94 வயதில் இவர் 3 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ள பக்வானி தேவி தாகருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் சர்வதேச பாரா தடகள வீரரும், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவருமான விகாஸ் தாகர், பக்வானி தேவியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.